உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

113

43. ஏழைக்குடிகளும் அரசனும்

இவ்விந்திய நாட்டின் வடக்கே இமயமலைக் கண்ண தான காசுமீர தேயத்தில் 'காரகோரம்' என்னும் பனிமலைப் பகுதிகளில் உறையும் ஏழைமக்கள் அங்குள்ள கடுங் குளிரினாலும் பனிக்கட்டிகளின் வீழ்ச்சியினாலும் பெரிதும் துன்புற்று வந்தனர். அந்நாட்டுக்கு அரசனான இராமசிங்கு என்பவன் அவர்களது துன்பத்தை நீக்குவதற்கு ஏதோர் ஏற்பாடும் செய்தான் அல்லன். அவர்கள் குளிருக்குத் தப்பிக் கதகதப்பாய் இருக்கத் தக்க விடுதிகளாவது, உடுத்துக் கொள்ளத்தக்க உடைகளாவது, உண்ணுதற்குச் சிறிது இசைந்த வெய்ய உணவாவது கிடைக்கப் பெறாமையால் பாழடைந்த இடங்களில் இருந்து தொடர்பாகத் துன்ப வாழ்க்கையே நடத்தி வந்தார்கள். அதனால் அவர்கள் தங்கிய டங்கள் பார்ப்பதற்கு அச்சமும் அருவருப்பும் தருவனவாய்த் தோன்றின. எப்படியோ ஒருகால் அவ்விராமசிங்கு மன்னன் அவ்ஏழைக்குடிகள் இருக்கும் அவ்விடத்திற்குப் போக லானான். அவன் போன நேரம் பட்டப் பகலாயிருந்தும், அங்குள்ள அவ்வெளிய மக்கள் கையில் கண்ணாடி விளக்கு கள் பிடித்துக்கொண்டு, கிழிந்த கந்தைத்துணி உடுத்துக் குளிரால் நடுங்கும் உடம்பினராய் அவன் முன்னே வந்தனர். அந்நிலையில் அவர்களைக் கண்ட அம்மன்னன் அவர்களை நோக்கி, “நீங்கள் ஏன் இந்நண்பகல் வேளையில் விளக்கு வெளிச்சத்துடன் வந்தீர்கள்?” என வினவினான். அதற்கு அவர்களில் ஒருவன், “மன்னர் பெருமானே; எங்களுடைய பெருந்துன்பமாகிய இருள் நிறைந்த இவ்விடத்திற்குத் தாங்கள் வந்திருத்தலால் எங்களுடைய அத்துயரநிலையைத் தாங்கள் கண்ணாற் கண்டு அதனைப் போக்குதற்காகவே இவ்விளக்கு வெளிச்சம் கொணர்ந்தோம்” என்றனன்.

கண்ணிருந்தும் பிறர்துயர் காணாதவர்க்கு அதனைக்

காண விளக்கு வெளிச்சமும் வேண்டுமன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/146&oldid=1584760" இலிருந்து மீள்விக்கப்பட்டது