உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் 18

வந்த இறந்தகால நிகழ்ச்சியினை நாம் ஆராய்ந்து பார்க்கப் பார்க்க, நாம் உயிரோடிருக்கும் இந்நிகழ்காலத்தும், நமக்குப் பின் நம்மரபில் வருவார் உயிர்வாழும் எதிர்காலத்தும் எல்லாரும் நாளுக்கு நாள் எவ்வளவு அறிவும் எவ்வளவு முயற்சியுமுடையராய் ஒழுகுதல் வேண்டுமென்பது விளங் காமற் போகுமோ?

இனி, அறிவும் உழைப்பும் முயற்சியும் என்னும் மூன்றனுள் அறிவை மேன்மேற் பெருக்கினாலல்லாமல், உழைப்பும் முயற்சியும் மிக்க பயனைத்தரா. நாடோறுங் காலையில் எழுந்து மாலை வரையில் உழுதொழிலைச் செய்வோனுஞ், சரக்குவண்டியிழுப்போனும், யாற்றிற் படகு செலுத்து வோனுங், காட்டில் விறகுவெட்டி விற்போனுந் தாம் வழக்கமாய் மேற்கொண்ட அவ்வுழைப்புக்கு மேற்றமதறிவைப் பெருகச் செய்வதில் அவாவில்லாதவர்களாய் நாட்கழிப்பராயின், அவரது செயல், நெற்குத்தும் பொறி, மாவரைக்கும் பொறி, நீர்இறைக்கும்பொறி, வண்டியீர்க்கும் பொறி முதலியவற்றின் அறிவில்லாச் செயல்களையே ஒப்பதாய்விடும். ஆகவே, கடுமையானதோர் உழைப்பிற் புகுந்திருக்கும்போதும் அதனை மேன்மேல் அறிவுடன் செய்து பயன்படுத்துவதோடு, அது செய்த நேரம் போக மிச்சமான நேரத்தை உயர்ந்த அறிவுடை யோர் செய்த நூல்களைப் பயில்வதிலும் பயன்படுத்தல் வேண்டும். ஏனெனில், அறிவை மேன்மேற் பெருக்குவதற்கு ஏற்ற வழி, அறிவின் மிக்கார் இயற்றிய நூல்களை இடையறாது பயில்வதே யாகும். மணற்கேணியினைத் தோண்டத் தோண்ட நீர் ஊறுதல்போல ஆன்றோர் நூல்களைக் கற்கக் கற்க அறிவு எல்லையின்றி வளராநிற்கும்.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”

(குறள் 396)

என்றார் திருவள்ளுவரும். அங்ஙனமே, வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய செல்வப்பொருளை ஈட்டு தற்குப் பலதுறைகளிற் புகுந்து பல்வகை முயற்சிகள் செய்வோரும், அம் முயற்சியளவில் தமதறிவைக் கரைகோலி மட்டுப்படுத்திவிடாமல், அம்முயற்சி யவிந்த நேரங்களில் விழுமிய அறிவு நூல்களைத் தொடர்பாகக் கற்று அறிவை விரிவுசெய்தல் வேண்டும். அங்ஙனஞ் செய்யாக்கால், தமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/234&oldid=1585260" இலிருந்து மீள்விக்கப்பட்டது