உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

  • மறைமலையம் -18

விலங்குகள் தொலைந்த பிறகுதான், மரமேற் பரண்களிலும் வாய் குறுகிய குகைகளிலும் வருந்திக் கிடந்த பண்டை மக்கள் அச்சந் தீர்ந்து, மலைமீதும் மலைக்கீழ்க் கானகங்களிலும் மனந் துணிந்து இயங்கத் தலைப்பட்டனர். காய்கனி கிழங்குகளே யன்றித், தினை சோளம் கம்பு கேழ்வரகு முதலான பலவகைக் கூலங்களையும் விளைக்கப் படிப்படியே தெரிந்து கொண் டார்கள். இங்ஙனமாக மலைமீதுறைந்த குறிஞ்சித்திணை வாழ்க்கையிலிருந்தவரையில் மக்கள் நாகரிகம் அற்றவர் களாகவே இருக்கலாயினர்.

நெடுங்காலத்தின் பின்னர் மலைக்கீழ் இறங்கி, அடி நிலத்திலுள்ள கானக வாழ்க்கையைக் கைப்பற்றியபோது, அறிவு சிறிது சிறிதாய்ப் பெருகக், கான்யாறுகளின் கரை மருங்கே குடியேறி, உணவுக்கு முன்போல் வறுமைப்படாமல், நெல்லு, புல்லரிசி, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி, எள்ளு, கொள்ளு, பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை முதலான கூலப்பயிர்களை விளைத்து, அவற்றின் பயன்களை அருந்தி உணவுக்குப் பட்ட சிறுமை நீங்கப்பெற்றனர். இதனாலும், ஆடு மாடு முதலான சிறந்த உயிர்களை மேய்த்து, அவற்றாற்றாம் அடைந்த பால் தயிர் வெண்ணெய் முதலான கொழும் பொருள்களை அருந்து தலாலும் உடம்பு செழுமையாய் வளர வளர, அதனால் உயிரும் அறிவுந் தெளிவுபெற்று, எதனையும் ஆய்ந்தோய்ந்து பார்த்து மேலும் மேலுந் தமது வாழ்க்கையைத் திருத்தமாய் நடத்துதலிற் கருத்தூன்றி வந்தனர். இவ்வளவிய குடும்ப வாழ்க்கையிற் புதல்வர் புதல்வியர் மிகுதியாய்ப் பிறக்கப் பிறக்க மக்களின் தொகையும் மிகுதியாய்ப் பெருகி வரலாயிற்று. உணவுக்கு மிடிப்படாமற் செழுமையாய் வாழுங் குடும்பங் களிற் பிள்ளைகளின் பிறப்பும் பெருகி வருதலை ஆராய்ச்சி வல்ல மேனாட்டாசிரியர்' கணக்குப் பண்ணி நூலெழுதி யிருக்கின்றனர். ஆகவே, கானக வாழ்க்கையை மேற்கொண்ட பழங்கால மாந்தர் நாளேற நாளேறத் தொகையிற் பெருகி, அங்ஙனம் பெருகியபின் உணவுக்கும் உறையுளுக்குங் கானகம் ஏற்றதாகாமை கண்டு, கானகத்தின் பல பெரும் பகுதிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/282&oldid=1585543" இலிருந்து மீள்விக்கப்பட்டது