உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

15

இதுமட்டுமோ! நமது உயிர்வாழ்க்கைக்குக், கட்டாயமாக வேண்டப்படும் நெல், கோதுமை, பயறு, பச்சைக்காய்கறி முதலியவைகளை நாம் விளைத்துக் கொள்ளுதற்கும் வெயிலோனது வெயிலொளியே காரணமாயிருக்கின்றது. வெயில் வெளிச்சம் படாவிட்டால் எந்தப் புற்பூண்டும், எந்த மரஞ்செடி கொடியும் செவ்வையாக வளர்ந்து பயன் தரமாட்டா. இன்னும், மழைக்கால, பனிக்காலங்களில் நமது உடம்பு குளிரால் விறைத்துப் போகாமலும், நாம் புழங்கும் தண்ணீர் பனிக் கட்டியாக இறுகிப் போகாமல் இருப்பதற்கும் வெய்யோனது வெப்பம் முதன்யைாக வேண்டியிருக்கிற தன்றோ?

நாம் இருக்கும் இடங்களெல்லாம் பனிமூடிப் போகு மானால், நாம் எந்தப் பண்டத்தையாவது பயன்படுத்திக் கொள்ள முடியுமா? நமதுடம்பு விறைத்துப் போகுமானால் நாம் உயிரோடிருத்தல் இயலுமா? இயலாதே? ஆதலால், நாம் நமது உயிர் வாழ்க்கையைச் செவ்வனே நடைபெறுவித்தற்கும், நமது வாழ்க்கைக்குக் கட்டாயமாக வேண்டப்படும் எல்லாப் பண்டங்களும் நமக்குப் பயன்படும் நிலையிலிருந்து உதவு வதற்கும் வெய்யோனுடைய ஒளியும் வெப்பமும் முதன்மையாக இருத்தலை நாம் கருத்திற் பதித்துக் கொள்வோமாக!

இவ்வாறு, எல்லா உயிர்களுக்கும் அறிவையும் முயற்சி யையும் எழுப்புதலிலும், அவ்வுயிர்களை உடம்புகளில் தோன்றச் செய்து அவற்றைப் பாதுகாத்தலிலும், அவ்வுயிர்கள் நுகர்ச்சிக்கு வேண்டிய எல்லா உணவுப் பொருள்களையும் விளைத்துத் தருதலிலும் பகலவனுடைய தன்மையும் செயலும் கடவுளின் தன்மையையும் அருட்செயலையும் ஒத்திருத்தலால், அப்பகலவனையே கடவுளாக அல்லது கடவுளின் ஒளி வடிவாகக் கருதிக், காலையில் அவன் கிழக்கில் எழும்போதும், மாலையில் அவன் மேற்கில் மறையும் போதும் அவனை உள்ளம் உருகிக் கைகூப்பித் தொழுவோமாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/48&oldid=1584662" இலிருந்து மீள்விக்கப்பட்டது