உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

17

ஓர் எறும்பு திரும்பவும் அப்புள்ளியிலேயே வந்து சேர்தலை எடுத்துக் காட்டலாம். அதுவேயுமன்றித், திங்கள் மறைவு (சந்திரகிரகண) காலத்தில், அதன்கண் காணப்படும் இவ்வுலகத்தின் நிழலானது வட்டவடிவினதாய்க் காணப்படுவ தாலும் இஃது உருண்டை வடிவினதாதல் தெளியப்படும்.

அவ்வாறாயின் பந்துபோல் உருண்டிருக்கும் இந்நில மண்டிலம் வான்வெளியில் ஏதொரு பற்றுக்கோடும் இன்றிச் சுழன்று செல்வது ஒரு பெரும் புதுமையாகத் தோன்று கின்றதன்றோ? எனின்; ஆம்; ஆராய்ந்து பாராதவர்க்கு அது புதுமைதான். ஆராய்ந்து பார்ப்பவர்க்கோ, அதன் உண்மை நன்கு விளங்கும். சிறுமியர் இருவர் எதிர் எதிரே நின்று தம்கைகளைக் கோத்துப் பிடித்துக் கொண்டு பின்னே சாய்ந்த வண்ணமாய்த் தும்பி சுற்றுதலைப் பாருங்கள்! அங்ஙனம் சுற்றுங்கால் பின்னே சாய்ந்திருக்கும் அவ்விருவருங் கீழ் விழாதது ஏன்? அவர்கள் தம் கைகளை நீட்டி இறுகப் பிடித்திருத் தலாலன்றோ? அது போலவே, பகலவன் மண்டிலமானது இந்நிலவுலகத்தை இழுக்க, இஃது அதனை இழுக்க, இவ்வாற்றல் ஒன்று மற்றையதை விட்டுப் பிரியாதாய் வான்வெளியிற் சுழன்று செல்கின்றதென்க. அங்ஙனமாயின், அறிவில்லாத இவ்விருவேறு உலகும் அறிவுடைய சிறுமகாரைப்போல் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டு செல்லுதல் யாங்ஙன மெனின், அறிவுடைய உயிர்கள் மட்டுமே ஒன்றையொன்று இழுப்பன, மற்றைய இழா என்று கொள்ளுதல் பொருந்தாது. அறிவில்லாத பொருள்களும் ஒன்றையொன்று இழுக்க வல்லனவாய் இருக்கின்றன. ஒரு காந்தக்கல் தன் பருமனுக்கு ஏற்பச் சிறிய பெரிய இரும்புத் துண்டுகளை இழுத்தல் காணலாம். அக்காந்தக் கல்லை ஒரு கடிதத்தின் கீழ் பிடித்து, அக்கடிதத்தின் மேல் சில ஊசிகளை வைத்துக் கீழுள்ள காந்தக் கல்லை நெடுக இழுத்தால் மேலுள்ள இரும்பூசிகளும், அதனால் இழுக்கப் பட்டு, அக்கடிதத்தின் மேல் நகருதலைப் பார்க்கலாம். அறிவில்லாத காந்தம் இங்ஙனம் இழுக்கும் ஆற்றல் வாய்ந்ததாய்

ருத்தல் போலவே, அறிவில்லாத ஞாயிற்று மண்டிலமும், வானவெளியினூடு இந்நிலவுலகத்தை இழுக்க, இதுவும் அதனையிழுக்க இரண்டும் இடைவெளியிற் சுழன்று செல்கின்றனவென்று ஓர்ந்துகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/50&oldid=1584664" இலிருந்து மீள்விக்கப்பட்டது