உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மறைமலையம் -18

பாதைதான் செல்கின்றது. அப்பாதை நெடுக உதிர்ந்த இலைச் செத்தைகளும், வேர்களும், கொடிகளும் நிரம்பியிருத்தலால் அவற்றின்மேல் நடப்பது அச்சந்தரும்; இடையிடையே சிறுசிறு மலைப்பிளவுகளும் உண்டு; ஆனாலும், அவைகளை எளிதில் தாண்டிச் செல்லலாம். திடீரென்று, யானை, வேங்கைப் புலி, முள்ளம்பன்றி முதலான மறவிலங்குகள் வந்து குறுக்கிடுதல் உண்டாகையால், மேலே தேனருவிக்குச் செல்வோர் ஒருவர் இருவராய் போதல் கூடாது. ஐந்தாறு பேர்க்குக் குறையாமற் கையில் தடிக்கம்பு தாங்கி இரைச்சல் ட்டுக்கொண்டே பகல் வேளையிற் செல்லவேண்டும். இங்ஙனம் சென்றால் தேனருவியைப் போய் அடையலாம். அடைந்ததும் அங்குள்ள காட்சி கண்ணும் மனமும் கவர்ந்து மேல் ஓங்கி விளங்குதல் அறியப்படும். அங்கே விழும் தேனருவியானது மிகவும் செங்குத்தான ஒரு மலைச் சுவரின் மேலிருந்து வழிகின்றது. அவ் வருவிச் சுவருடன் வலப்புறத்தில் இணைந்திருக்கும் கற்பாறை, மேலே குடைகவித்தாற் போல் அமைந்துள்ளது; மேலிருந்து தேனருவி வழியும் மூலையில் நாலைந்து தென்னைமர உயரத்தில் வட்டமான ஒரு பெருந்தேனடை இருந்தது. அவ்வளவு பெரிய தேன் அடையை யாம் வேறு எங்குமே கண்டதில்லை. அதன் குறுக்களவு சிறிது ஏறக்குறையப் பத்து அடி இருக்கும். அதன் நிறஞ் சிறு சிவப்பாய் இருந்தமையால், அது காலையில் எழும் பகலவன் வடிவை ஒத்திருந்தது. அத்தேனடையின் பக்கத்துள்ள மூலை மேலிருந்து அருவிநீர் வீழ்தல் பற்றியே அதனைத் தேனருவியென வழங்குகின்றனர் என்றும், எக் காலத்துமே அத்தேனடை அங்கு இருக்கும் என்றும் எம்முடன் வந்தார் சொல்லக் கேட்டோம்.

தேனருவி கீழ்விழும் இடம் ஆழ்ந்த ஒரு சிறு குட்ட மாயிருக்கிறது. மேலிருந்து விழும் நீரின் கடுமையால் அக் குட்டம் நுரையும் குமிழியும் உடையதாய் ஓயாது நிறைந்து தன்னிலிருந்து மற்றொரு சிற்றருவியினை உண்டாக்க, அச் சிற்றருவியே வரவரப் பெரிதாகிக், கீழே சண்பகாடவியிலும், அதற்கும் கீழே திருக்குற்றாலப் பெருமான் கோயிலின் பக்கத்தும் போய் வீழ்கின்றது. தேனருவியின் கீழ் உள்ள குட்டம் ஒரு கற்பாறையின் குடையில் அமைந்திருத்தலால், அதன்கண் நிரம்பும் நீர் மிக்க தெளிவுடையதாய் தூய்தாய் மிகக் குளிர்ந்து இருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/59&oldid=1584673" இலிருந்து மீள்விக்கப்பட்டது