உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

39

தன்வாயைத் திறந்து தன் அகத்திருந்த ஒரு பெருந் தீக்கட்டி யினைக் கக்குதல்போல் இருக்கின்றது.

அப்போது கடல்நீர் குன்றின் குவடென உயர்ந்து, பிறகு சுருண்டு கீழ்விழுங்கால் வெள்ளை வெளேல் என்ற அலை களை உண்டாக்க, அவ்வலைகள் ஓவென இரைந்து வருதலைப் பார்க்கும்போது, அவை, போர்முனையில் வரிசை வரிசையாக நிறுத்தப்பட்ட வெள்ளைக் குதிரைகள் தம்முடைய கழுத்தி லிருந்து தொங்கும் வெள்ளிய கூந்தல் அலைய அலையக் கனைப்பொலியுடன் பாய்ந்து வருவது போல் தோன்றுகின்றன.

அந்நேரத்தே பாய்கட்டிக் கப்பல்களும் நீராவிக் கப்பல் களும் கரைகாணப்படாத அப்பரவையினூடு தன்னந்தனியே செல்லுதலைக் காண்கையில், நமதுள்ளத்தே ஒரு வியப்பும் அச்சமும் உண்டாகின்றன. எல்லையும் ஆழமும் தெரியாத இப்பெருநீரிலே இம் மரக்கலங்கள் எங்ஙனம் எல்லைகண்டு சல்கின்றன! இவைதம்மை எல்லைகண்டு செலுத்தி அப்பா லுள்ள நாடு நகரங்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கும் மீகாமனுடைய கருத்தும் கூர்ந்த அறிவும் உணர்ந்து பார்க்கும் கால் பெரு வியப்பினை விளைவிக்கின்றன அல்லவோ! ஆழமும் அறியாமல், காற்றுக்கும், மழைக்கும் உள்ளாகிக், கடவுளை யன்றி வேறேதொரு துணையும் இல்லாமல் செல்லும் அக்கப்பல்களைக் காணும்போது அச்சமும் உண்டாகின்றது. கரையிலிருந்து நோக்குவார்க்கே இத்தகைய வியப்பும் அச்சமும் தோன்றுமானால், நடுக்கடலிலே கப்பலிலிருந்து சுற்றி ஒரே வெள்ளக் காடாயிருத்தலை நோக்குவார்க்கு இன்னும் எத்தனை வியப்பும், திகிலும் உண்டாகா நிற்கும்.

ஒருகால் யாம் தூத்துக்குடியிலிருந்து கப்பலேறிக் காழும்பு மாநகர்க்குச் செல்லா நிற்கையில் இத்தகைய நிகழ்ச்சியால் எமது நெஞ்சம் அசைவுண்டது. யாம் கப்ப லேறிய மாலை கப்பல் துறைமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கையில் நள்ளிரவில் எழுந்து கட லை யும், வானத்தையும் நோக்கினோம். வானில் வெண்திங்கள் நிலவொளி விரித்து வழங்கியது. அவ்வொளி பட்டுக் கட் புலனுக்கு விளங்கா நின்ற கடலிடமெல்லாம் தூய வெண் பட்டாடை விரிக்கப்பட்டாற் போல் வெளேலென ஒளிர்ந்தது. ஆ! அக்காட்சியின் வனப்பை என்னென்போம்! அதனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/72&oldid=1584686" இலிருந்து மீள்விக்கப்பட்டது