உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

49

நமது இந்திய நாட்டுக்கு வடக்கே நெடுந்தொலைவில் உள்ள மங்கோலியா தேயத்தில் 'கோபி' என்னும் பாலைவெளி இருக்கின்றது. இது, சகாரா வெளியைப் போல் புதை மணல் நிறைந்ததாயும் கொடிய சூறை அனற்காற்றால் திரட்டிக் குவிக்கப்பட்ட மணற் குன்றுகளும், அவற்றினிடையே பல பள்ளத்தாக்குகளும் உடையதாயும் இருக்கின்றது. இது வெயிற் காலத்தில் வெப்பம் மிகுந்தும் குளிர்காலத்தில் குளிர்மிகுந்தும் கிடக்கின்றது.

இனி, நமது தமிழ்நாட்டின் தெற்கே இருந்து கடலுள் அமிழ்ந்து போன பண்டைத் தமிழகமாகிய குமரி நாட்டின் நடுவே ஒரு பெரும் பாலைவெளி மணல் நிறைந்ததாய் இருந்தமையும், அதனூடு சென்று வணிகம் புரிந்த வணிகர் குழாங்கள் ஒட்டகங்கள் மேல் இவர்ந்தே அதனைக் கடந் தைமையும், அப்பண்டைக் காலத்தில் இயற்றப்பட்ட அரும் பெருந் தமிழ் முதல் நூலாகிய தொல்காப்பியத்தில் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறும் குறிப்புகள் கொண்டு நன்குணரப் பெறுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/82&oldid=1584696" இலிருந்து மீள்விக்கப்பட்டது