உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் 18

காலையிலே இங்ஙனம் அழகிய உருவங்களைப் பார்த்து வரும் சிறார் நாளேற நாளேற அழகிய உருவும் விழுமிய அறிவும் செழுவிய செயலும் உடையராகுவர்.

அதன்பின் கட்டாயமாகச் செய்தற்குரியது வயிற்றில் உள்ள மலச்சக்கையை வெளிப்படுத்துவதேயாகும். சிறுவர் சிலர் பலர் காலையில் இதனைச் செய்யாமல் ஓதுதல், எழுதுதல் முதலான முயற்சிகளைச் செய்துவிட்டு, அதன்பின் மலங் கழிக்கச் செல்கின்றனர். விடியற்காலையிலேயே வெளிப்பட வேண்டிய சக்கை வெளிப்படாமல் குடலுக்குள் இருக்குமாயின், அது கருகிக் குடரைப் புண்படுத்துவதுடன், இரத்தத்தையும் நஞ்சாக்கும். அதனால் மூலச்சூடும், கண்ணெரிவும், மேனி யெங்கும் சொறி சிரங்கும் ஒவ்வொருகால் வயிற்றுளைவும் உண்டாகும். ஆதலால் காலையிற் செய்யவேண்டிய முதன் முயற்சி மலநீர் கழித்தலேயாம்.

நகரங்களின் உள்ள மாணாக்கர்கள் தம் வீட்டுக்குப் புறம்பே சென்று குடரைத் துப்புரவு செய்தல் இயலாது. ஆனால், நகர்ப்புறங்களிலும் நாடுகளிலும் இருப்பவர்க்கோ அவ்வசதியுண்டு. ஆகையால் அத்தகையவர்கள் காலையில் ஒருகல் தொலைவுக்குக் குறையாமல் நடந்து சென்று, ஒதுக் கிடங்களில் குடரைத் துப்புரவு செய்து திரும்புக. இல்லங்களில் கட்டுப்பட்டு நிற்கும் நச்சுக்காற்றையே எந்நேரமும் உள்ளிழுக்கும் சிறுவர்க்கு, இங்ஙனம் வெளியே செல்வதால் தூயகாற்றை உட்கொள்ளும் சிறந்த நன்மை உண்டாகின்றது. அதனொடு கை கால் முதலிய உறுப்புகள் நன்கு அசைந்து உடம்புக்கும் வலிவையும் நலத்தையும் தருகின்றன. நகரங்களில் உறையும் சிறாரும் இயன்ற மட்டும் காலை மாலை வேளைகளில் உலாவுதல், நடத்தல், ஓடல், குதித்தல், பந்தாடல் முதலிய உடற்பயிற்சிகளில் தமதுடல் நலத்திற்கும் ஒழிவு நேரத்திற்கும் வேண்டுமளவு கட்டாயம் பழகிவரல் வேண்டும்.

குடரைத் துப்புரவு செய்தபின், ஆலங்குச்சி வேலங்குச்சி நுணாஇலை முதலியன கொண்டு பற்களை நன்றாகத் தூய்மை செய்க. இவை அகப்படாக்கால், வெள்ளிய பட்டுப் போன்ற தூய சாம்பலை வடிகட்டி வைத்துக் கொண்டு, அத்தூளை யிட்டுப் பல் துலக்கலாம். அல்லது உப்பும் அடுப்புக்கரியும் சேர்த்து அரைத்த பொடி கொண்டும் பல் தேய்க்கலாம்.

டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/85&oldid=1584699" இலிருந்து மீள்விக்கப்பட்டது