உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க்கான செந்தமிழ்

61

11. ஒரு தாயின் நல்லெண்ணம்

ஊமையும் செவிடுமாயுள்ள ஒரு பெண்மகள் ஒருவ னுக்கு மணஞ்செய்விக்கப்பட்டுச் சில்லாண்டுகளில் ஒரு பெண் மகவை ஈன்றாள். தான் பிறர் பேசுவதைச் செவியினாற் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் கூடா விட்டாலும், பிறர் தம் வாயின் இதழ்களை அசைத்துப் பேசுவது போல் தான் பேசுதல் இயலா விட்டாலும், காதினால் கேட்பதும் வாயினால் பேசுவதும் நலஞ் சிறந்தனவாக இருக்கவேண்டுமென்றும் தனக்கு அவ்விரண்டும் இல்லாதது ஒரு பெருங்குறைபாடே என்றும் தனக்குள் எண்ணிவந்தாள். ஒருநாள் அவள் தான் ஈன்ற மகவினைத் தொட்டிலிற்கிடத்தி அதன் பக்கத்தே அமர்ந்திருக்கையில் தன்னைப்போலவே தன் பிள்ளையும் ஊமையும் செவிடு மாயிருக்குமோ, அல்லது மற்றவர்களைப் போல் பேசவும் கேட்கவும் வல்லதாய் இருக்குமோ என்று ஐயுறவுகொண்டு கவலைப்படுவாளானாள். தன்மகவு வளர்ந்து நடமாடும் போதன்றோ அது பேசவும், கேட்கவும் வல்லதென்பதை அவள் குறிப்பாக அறியக் கூடும். ஆனால், அதுவரையில் தன் மகவின் நிலையை அறியாமலிருத்தல் அவளால் இயலுமோ! மனந்துடிக்கின்றது! என் செய்வாள்! பாவம்! முடிவாக அவள் உள்ளத்தில் ஒன்று தென்பட்டது. உடனே தன் அருகில் கிடந்த ஒரு குழவிக் கல்லை எடுத்துக் கொணர்ந்து தன்மகவு உறங்கும் தொட்டிலின் பக்கத்தே நிலத்தின்கண் திடுமென எறிந்தாள். எறிந்த அக்குழவிக்கல் நிலத்தில் தாக்கி எழுப்பிய பேரோசை கேட்டு உறங்கிய மகவு திடுக்கிட்டு விழித்து வாய்திறந்து அழுதது. அக்குறிப்பினைக் கண்ட அத்தாய் தான் ஈன்ற மகவுக்கு ஓசையைக் கேட்கும் செவியுணர்வும், கேட்டு வாய்திறந்து அழுதமையால் பேசுந்தன்மையும் உண் உண்டென்பதறிந்து மகிழ்ச்சியால் கண்ணீர் சிந்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/94&oldid=1584708" இலிருந்து மீள்விக்கப்பட்டது