உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

5. இளந்தைக் கால வரலாறு*

மறைமலையடிள் சிற்றூருக்குச் சென்ற வரையில் அவரது வரலாறு:1876 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 15 ஆம் நாளில் மறைமலையடிகள் நாகபட்டினத்திற் பிறந்தவர். இவர் தம் தந்தையார் சோழியச் சைவவேளாளகுலத் தலைவராய்த் தோன்றி, நாகபட்டினத்திற்கு இரண்டுகல் தொலைவிலுள்ள காடம்பாடியிற் பெருஞ் செல்வராய் வாழ்ந்த சொக்கநாத பிள்ளை என்பவரேயாம்; இவர்தம் அன்னையார் பெயர் சின்னம்மை. இவர் பிள்ளைமைப் பொழுதிலே நாகபட்டினத் தின்கண் இருந்த உவெஸ்லியன் மிஷன் கல்லூரியில் கல்வி பயிற்றப்பட்டு வருகையில் ஆங்கிலந் தமிழ் என்னும் இரு மொழிகளையும் விரும்பிக் கற்று அவற்றில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரித் தலைமையாசிரியராற் பல பரிசுகளும் அளிக்கப் பெற்று வந்தார். இவர்க்குப் பதினாறாம் ஆண்டு நடக்கையில் தமிழ்மொழி கற்கும் அவா இவரது உள்ளத்தில் அளவு கடந்து எழ, அவ்வவாவினை நிரப்புதற் பொருட்டு அக்காலையில் நாகபட்டினத்திற் புத்தகக் கடை வைத்துக் கொண்டிருந்த இயற்றமிழாசிரியர் திரு.வெ.நாராயணசாமிப் பிள்ளையவர் களையடைந்து, அவர்கள் பாற் செந் தமிழிலக்கண இலக்கியங்களைச் செவ்வனே ஓதிவரலானார். நாளேற நாளேறத் தமிழ் மொழிச்சுவை இவரது உள்ளத்தைப் பெரிதுங் கவர்ந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் மிக உயர்ந்த நூல்களைக் கற்பதில் இவர்க்கு விழைவு மிகுந்து வந்தமையிற், கல்லூரியிற் கற்பிக்கப் பட்டுவந்த சிறுநூற் பயிற்சி இவரது கருத்துக்கு இசையாதாயிற்று. பதினாறாம் ஆண்டு நடக்கையில், தம்மோடு, உடன் பயிலும் மாணக்கர்க்குத் தமிழறிவுந் தமது சமயவுணர்வும், பெருகல்வேண்டி ‘இந்து மதாபிமான சங்கம்' எனப் பெயரிய ஒரு கழகம் புதிதாக நாட்டி அதனை மிகுந்த ஊக்கத்துடன் நடத்தி வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/104&oldid=1585695" இலிருந்து மீள்விக்கப்பட்டது