உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மறைமலையம் 19

விடக்கூடும் என நினைப்பது பெரும் பிசகு, நமக்குத் துணையாய், உதவியாய் நிற்பரென நம்மால் நம்பப்பட்ட வர்கள், நோய்கொண்டமையாலோ நம்மொடு மாறு பட்டமையாலோ, அல்லது பிறர் வயப்படுதலாலோ, நமக்கு உதவியுந் துணையுமாகாமல் நமது முயற்சியினைப் பாழ் படுத்துதலுங் கண்கூடாய்க் காண்டுமல்லமோ? மேலுஞ், சடுதியிலிறத்தலுஞ் சடுதியில் நோய்வாய்ப் படுதலும், பிறத்தலும் ஆகிய நிகழ்ச்சிகள் தம் அறிவாற்றலை முற்றும் கடந்து நிகழ்தல் எல்லராலுந் தெளியப்பட்டுக் கிடத்தலின், நம்மவர் தாமே தம்முள் ஒருவருக்கொருவர் உதவியாய் நின்று தாம் எடுத்த முயற்சிகளை நன்கு முடிக்கமாட்டு வாரென்பதும் போலிப் பொய்யுரையேயாம்.

எனவே, சிற்றுயிர்களாகிய நமக்குள்ளே அறியாமை யும், மறதி சினம் காமம் பகை முதலிய இழிகுணங்களும், இளைப்புக் களைப்புகளும் இல்லாத முற்றறிவும் முழு முதலாற்றலும் ஒருங்குடைய, ஒரு பெருந் தனித் தலைமைக் கடவுளின் உதவி ஒன்று மட்டுமே நமக்கு எக்காலத்தும் எந்நேரத்தும் எவ்விடத்தும் மாறாத பேருதவியாய் நிற்ப தென்பதும், அக்கடவுளின் துணை ஒன்றுமே எஞ்ஞான்றும் மாறாத பெருந்துணையாய் நிற்பதென்பதும் நாம் தெளிதல் வேண்டும். அத்துணைப் பேருதவியும் அத்துணைப் பெருந் துணையுமாய் நிற்கும் முழுமுதற் கடவுள், ஒரு நொடிப் பொழுதும் எம்மை விட்டகலானாய், எமக்கு உள்ளும் புறம்புமாய் நிற்கின்றான் என்னும்பெரு நம்பிக்கையும் பேருறுதியும் வந்தாலல்லாமல், எவனும்எந்த முயற்சியையும் அயர்வின்றி எடுத்து முடிக்கமாட்டுவானல்லன். ஆதலால், எத்தகைய முயற்சிக்கும், எத்தகைய நல்லெண்ணத்துக்கும், எத்தகைய நல்லறிவு நிகழ்ச்சிக்கும், அடிப்படையாய் நிற்கற்பாலது பேரறிவும் பேராற்றலும் உடைய ஒரு முழுமுதற் கடவுளைப் பற்றிய நன்னம்பிக்கையேயாம், அந்நன்னம்பிக்கையுடையார்க்கு, அவரதுள்ளம் மேன்மேல் அறிவாலும் முயற்சியாலுங் கிளர்ந்தெழுமாதலின், அவர் முயற்சிக்குத் தடைசெய்யத் தருவது ஏதுமே இன்றாம். சமணர்கள் இழைத்த கொடுந் தீங்குகட்கெல்லாஞ் சிறிதும் அஞ்சாது நின்று அவற்றைப் புறங்கண்ட அப்பர் சம்பந்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/145&oldid=1585737" இலிருந்து மீள்விக்கப்பட்டது