உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

243

அது பொருத்தமே யென்றாலும், விரிந்து நின்று அறியமாட்டாத நமக்கு நாம் சுட்டியறியும் ஒரோவிடத் தாவது இறைவன் தன்தொழில் நிகழ்ச்சிகளைப் புலப்படுத் தற்பால னல்லனோவெனிற்; பிறவிக் குருடராவார் ஞாயிற்றின் எதிரே நிற்பினும் அதன் ஒளிவிளக்கத்தினைக் காணமாட்டுவாரல்லர்; அதுபோல, ஒவ்வொரு நொடியும் நம் கண்ணெதிரே நடைபெறும் இறைவன் றன்றொழில் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு பொருளிடத்துந் தனித்தனியே தேர்ந்துணரமாட்டாத குறை நம்பால் உளதேயன்றி இறைவன்பால் உளதன்று. நமக்குப் புறத்தேயுள்ள பொருள் களில் அவன்றன் அருள் இயக்கங்களைக் காண்டல் ஒருபுறம் இருக்கட்டும். நமதுடம்பின் அகத்தே நடக்கும் அவன்றன் அருள் நிகழ்ச்சிகளையாவது ஒரு சிறிது உற்று நோக்குவே மாயின், அவை நன்கு புலனாம். நாம் வேண்டிய வுணவை வேண்டிய மட்டும் அறிந்து உண்கின்றோம்; ஆனால், உண்ட அவ்வுணவை உடம்புக்கு வேண்டிய பலவேறு சாறுகளாகப் பிரித்து, உடம்பின் எப்புறத்தும் அவற்றைச் செலுத்தி உடம்பை அழியாமல் வளர்க்குஞ் செயலை நாம் ஓர் எட்டுணையாவது அறிந்து செய்கின்றனமா? இல்லையே. தொண்டையை விட்டுக் கீழ் இறங்கியபின் அவ்வுணவு எவ்வெவ்வகையான மாறுதல்களை அடைகின்றனவென்பது நம்மாற் சிறிதும் அறியக்கூடவில்லையே! இவ்வாறு நம் உடம்பினகத்தே ஓவாது நடக்குந் தொழின் முறைகளையே சிறிதேனும் அறியமாட்டாத நாந்தாமா அத்தன்மையவாங் கடவுளின் மிக நுண்ணிய தொழில் நிதழ்ச்சிகளை அறியமாட்டுவோம்! நம்மால் அறிய இயலாத அத்துணை வியத்தகு தொழில்களையும் நம்முடம்பினகத்தே எந்நேரமும் நிகழ்த்தி, நமதுடம்பை வளர்த்து, நமதுயிரை அதன்கண் நிலைபெறச் செய்துவரும் இறைவன்றன் அருட்செயலை நம்மிலே நாம் புலப்படக் கண்டுவைத்தும், அதனை யுணராமல், “இறைவன்றன் அருட்டொழில் நிதழ்ச்சிகளை யாம் யாண்டுங் கண்டிலேம்” எனக் கரைபவர், ஞயிற்றின் ஒளி விளக்கத்தை மறுக்கும் பிறவிக் குருடரேயாவரல்லது மற்றென்னை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/276&oldid=1585888" இலிருந்து மீள்விக்கப்பட்டது