உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

33

தின்கின்றனர். வடமுனைக்குத் தெற்கே பன்னூறு மைல்களுக்கு இப்பால் உள்ள சீனம் திபேத்து முதலான நாடுகளுங் குளிர் மிகுந்தனவாய் இருப்பினும் ஏறக்குறைய நமது தமிழ் நாட்டைப்போலப் பகலிரவுகள் இருப்பினும் பெரும்பாலும் ஒத்திருத்தலால் அவற்றின்கட் புற்பூண்டுகள் பயிர் பச்சைகள் வளரவும், அவற்றின்கண் உறையும் மக்கள் நாகரிக முடைய ராய் வாழவும் வசதிகள் உண்டாகின்றன. என்றாலும், நெற்பயிர் காப்பி கரும்பு கோக்கோ வாழை மா பலா தெங்கு முதலியனவாக நம் நாட்டில் விளைவன அவ்விடங்களிற் பயிராகமாட்டா. அவ்விடங்களில் விளையும் கோதுமை வாற்கோதுமை சோளம் கொடி முந்திரி ஒலிவமரம் தேவதாரு முதலியனவும் அவ்விடங்களில் செழுமையாய் விளைதல் போல நம்நாடுகளில் விளைவதில்லை. இந்நாடுகளிலிருந்து உயிர் வாழும் மக்கள் உடம்பும் அவர்கள் உறையும் பனி நிலத்தின் தன்மைக்குப் பொருந்த இறுகி வெண்மை நிறமும் வலிவும் உடையனவாய்க் காணப்படுகின்றன. வெப்பம் மிகுந்த நடு ஆப்பிரிக்காவில் உள்ள நீகிரோவர் உடம்போ கன்னங்கறேலென்ற கருநிற முடையதாய்க் காணப்படுகின்றது. சூடுங் குளிருஞ் சிறிது ஏற்றத் தாழ்வாக உள்ள இடங்களில் உள்ளவர் உடம்புகளோ சிறிது கறுப்பு நிறமாகவும் அல்லது பழுப்பு நிறமாகவும் ஒவ்வொருகாற் பொன்னிறமாகவும் செம்பு நிறமாகவும் மென்மை யுடையனவாகவும் தோன்று கின்றன. இனிக் குளிர் மிகுந்த நாடுகளில் இருப்பவர் உடம்பு முழுவதும் மறைத்த உடை மேற்கொள்பவராயும் புழுக்கம் மிக்க நாடுகளில் உறைபவர் அரையாடையுடையராயு மிருக்கக் காண்கின்றோம். இவ்வாறு நில இயற்கைக்கு ஏற்றபடி அவவந் நிலங்களில் உறையும் பொருள்கள் சிற்றுயிர்கள் மக்கள் முதலியவற்றின் இயற்கைகளும் பலவேறு வகையவாய்க் காணப்படுதலால், அவ்வந்நிலத்து மக்களின் குரலொலிகளும் பல திறப்பட்டுத் தோன்றுவவாயின வென்று அறிதல் வேண்டும்.

பெரும்பாலும் குளிர்மிகுந்த நாடுகளில் உறைவோரின் குரலொலிகள் உரத்த ஓசை வாய்ந்தனவாய் இருக்கின்றன. வெம்மை மிக்க இடங்களில் உள்ளாரின் குரலொலிகளோ மெல்லியவா யிருக்கின்றன; இரண்டிற்கும் நடுத்தரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/66&oldid=1585652" இலிருந்து மீள்விக்கப்பட்டது