உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

143

வினையிலே கிடக்கும் உயிர்களை அவ்வினையினீங்கிய இறைவன் இவ்வாறெல்லாம் புன்முதலான மெய்யிற்புகுத்திப் பிறவியுட்படுத்து மாற்றால் அவற்றின் அறிவைக் கிளர்ந்தெழுமாறு செய்து ஆட்கொள்ளும் அருட்டிறமெல்லாம் மெய்யருள் நிலை கைவந்த பொய்யில் திருவாதவூரர்,

“வினையிலே கிடந்தேனைப் புகுந்துநின்று

போதுநான் வினைக்கேட னென்பாய் போல இனையனான் என்றுன்னை யறிவித் தென்னை யாட்கொண்டெம் பிரானானாய்

(திருவாசகம், திருச்சதகம், 22)

என்று மிகத்தெளிவாக எடுத்தோதியிருத்தல் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாற்று.

-

(7-9) சிலநாள் சிலகாலம், நந்து முதலாகிய உடம்பில் புகுத்து- நத்தைமுதலான உடம்புகளிற் புகுத்திவைத்து, தந்தனை ஈர் உணர்வு - இரண்டறிவுகள் கொடுத்தருளினை;

'நந்து' ஈரறிவுயிராதல், "நந்தும் முரளும் ஈரறிவினவே" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்திற்காண்க (மரபியல், 29).

ஈருணர் வென்பன, மெய்யினால் தொட்டறியும் அறிவும், நாவினாற் சுவைத்தறியும் அறிவுமாம்.

(9-11) சிலநாள் - சிலகாலம் சிதல் முதலாகிய குரம்பையில் செலீஇ- கறையான் முதலான உடம்புகளிற்செலுத்தி, மூ உணர்வு உணர்த்தினை -மூன்று வகையான உணர்வுகளை உணர்த்தி யருளினை;

எறும்பு முதலானவைகளுஞ் சிதலினத்திற் சேர்க்கப்படும்; “சிதலும் எறும்பும் மூவறிவினவே” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார் (மரபியல், 30).

செலீஇ-பிறவினை, வினையெச்சம்; இசைநிறையளபெடை, இது பிறவினைக்கண்வருதல், "மேல்கொண்டவை செலீஇ என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளடியிற் காண்க. (12,13); இது சென்று எனத் தன்வினை வினையெச்சமாயும் வரும்.

மூன்றுவகை உணர்வுகளாவன, மேற்காட்டிய இருவகை யுணர்வுகளொடு மூக்கினால் முகந்துணரும் உணர்வுமாகும். மன்னும் ஓவும் அசை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/168&oldid=1586912" இலிருந்து மீள்விக்கப்பட்டது