உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் - 20

மெய்ச்சமய மாகிய சைவத்தின் மேன்மையை யுணரும் பேரறிவின்றி வேறு சமயப் பொய்ப் பொருள்களை யெல்லாம் வீண் பற்றுள்ளத்தால் வறிதே விரித்து வழக்கிட்டுத் திரிதலின் அவரெல்லாஞ் 'சிறுபுன் மாந்த' ரெனவும், அவரது பொருளில் மொழி ‘குறுமொழி' யெனவும் இங்குக் கூறப்பட்டன.

இப் பகுதியிற் சோமசுந்தர குரவர் திருஞான சம்பந்தரோடு உவமிக்கப்படுதல் கண்டுகொள்ளப்படும, சோமசுந்தர குரவர் திருஞான சம்பந்தரேபோல், இத்தென்னாடெங்கும் மாயாவாத வேதாந்தம், பாஞ்சராத்திரம் முதலான அயல் மதங்கள் தலையெடுக்க வொட்டாமல் அவற்றின் சிறுமையை எடுத்துக காட்டிச் சிறந்த சித்தாந்த சைவத்தின் பெருமையை நன்கு விளக்கி அஃது இனிது தழைத்தோங்குமாறு செய்த பெரியாராவர். இவரது சமயத் தொண்டின் விழுப்பம் அடிகள் இயற்றிய சோமசுந்தரக் காஞ்சிச் செய்யுட்களால் நன்கறியப்படும்.

(109-114) பொருள் பெரிது ஈட்டப் பெருகுறும் அவாவினும் செல்வத்தை நிரம்பவுஞ் சேர்ப்பதற்கு மிகுகின்ற அவாவின் கண்ணும், ஈட்டிய ஒள் பொருள் இவறிக் கூட்டி மக்களும் மனைவியும் துய்க்க நல்கி நின்கழல் வணங்கா இன்னா மடியினும் - அங்ஙனந் தொகுத்த மேன்மையான பொருளை மேலும் அவா மிகுந்துபெருக்கித் தம் புதல்வர்களும் மனைவியும் நுகரக் கொடுத்துத் தேவரீருடைய திருவடிகளை வணங்காத தீய சோம்பலின் கண்ணும், அரிய நாட்களை வறிதே போக்கி ஏழையேனுடைய அரிய வாழ் நாட்களை வீணாய்க் கழித்து, அறம் திறம்புளியில் சிறந்தனென் மன் அறநிலை பிறழும் இடத்து மிகுதியுஞ் சிறந்த விளங்கினேன்;

-

இம்மை மறுமைப் பயன்களைப் பயத்தலிற், பொருள் 'ஒண்பொருள்' எனப்பட்டது; “ஒண்பொருள் காழ்ப்ப இயற்றி யார்க்கு" என்னுந் திருக்குறளுக்குப் பரிமேலழகியார் கூறிய உரையைக் காண்க (760).

‘இவறல்’, அவா மிகல்; “ஈட்டமிவறி இசைவேண்டா ஆடவர்” (1003) என்பது திருக்குறள்.

‘மக்களும் மனைவியுந் துய்க்க நல்கி’ யென்னுங் குறிப்பு அப்பொருளைக் கடவுள் வணக்கம் முதலிய நல்வழிகளிற் செலவழியாமையைக் குறித்தது.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/235&oldid=1586979" இலிருந்து மீள்விக்கப்பட்டது