உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

263

மயிலுக்கு, நறும்படாம் வீசிய - குளிரனுகாமைப் பொருட்டுத் தனது இனிய போர்வையை அதன்மேல் எறிந்த, உறுவனும் லனே - தக்கோனாகிய பேகனும் இஞ்ஞான்று வாழ்ந்திலனே!

இவ்வள்ளலின் அருஞ்செயலும்,

“வானம் வாய்த்த வளமலைக் கவாஅற் கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய வருந்திற லணங்கி னாவியர் பெருமகன் பெருங்க னாடன் பேகனும்”

எனச் சிறுபாணாற்றுப்படையின்கண் (84-87) வரும். தோகை, ஆகுபெயர்.

-

(48-50) பவனமா உலகில் நவை அறப் பெற்ற அமிழ்து பொதி நெல்லி பாதாள உலகத்தினின்று பழுதறப்பெற்ற அமிழ்தம் நிறைந்த கருநெல்லிக் கனியை, ஒளவைக்கு ஈத்த ஔவையென்னும் நம் செந்தமிழ்ப் பிராட்டிக்கு அவர் நீடு வாழுமாறு உதவிய, சிதையாப் பேற்றின் அதிகனும் இலனே அழியாப் புகழாகிய பேற்றினை எய்திய அதிகமானும் இன்று வாழ்ந்திலனே!

அதியர் கோமானின் இவ்வருஞ்செயலும்,

"மால்வரைக்

கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி

யமிழ்துவிளை தீங்கனி யௌவைக் கீத்த

வுரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவே லரவக்கடற் றானை யதிகனும்”

என்று (சிறுபாண், 99-103) கூறப்படுதல் காண்க.

‘பவனமாவுலகு' நாகருலகு; சாக்காடு கெடுத்தமையின், அஃது ‘அமிழ்துபொதி நெல்லி' யெனக் கிளந்தோதப்பட்டது. இக் கருநெல்லிமரம் ஒரு பெரிய மலைமுழைஞ்சின் அடியிலே நின்றமை, "தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி” என்னும் ஔவையார் பாடலால் (புறநானூறு, 91) அறியப்படுதலின், அதன்கனி பாதாளவுலகினின்று பெறப்பட்டதென்றார். பவனம் - பாதாளம்.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/288&oldid=1587032" இலிருந்து மீள்விக்கப்பட்டது