உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் – 21

உண்மைக்கருத்தறிந்த உரையாதலும், அம்மாயாவதியார் நாயகரவர்கள் உரையை மறுத்துத் தமது மாயாவாதக் கோளைத் திருவள்ளுவர் மேலேற்றிக் கூறியவுரை அவரது கருத்து அறிந்ததாகாப் பொருந்தாவுரை யாதலும் பிரிந்தினிது விளங்க ஒரு மறுப்புரை கி.பி.1898 ஆம் ஆண்டின் முதற்றிங்கள் முதல் நாளில் எழுதத்துவங்கி, ஆறாம் நாளில் அதனை முடித்து நாயகரவர்கள் பாற் கையெழுத்துப்படியைச் சேர்ப்பித்தோம். நாயகரவர்கள் அதனை முழுதும் உற்று நோக்கி ஆராய்ந்து, வடசொல்மிகக் கலவா அதன் செந்தமிழ் உரைநடையினை வியந்து பாராட்டியதோடு, அதனைத் தமது பொருட் செலவிலேயே அச்சிட்டும் வெளிப்படுத்துதவினார்கள்.

அதன்பின்யாம் சென்னைக்குப் போந்து, 1898 ஆம் ஆண்டு மூன்றாந்திங்கள் ஒன்பதாம் நாளிற் சென்னைக் கிறித்துவ கல்லூரியில் தமிழாசிரியராய் அமர்ந்த காலந் தொட்டு நாயகரவர்கட்கு அணுக்கராய் ஒழுகி வருகையில், வடசொல் மிகக் கலந்த அவர்களது உரைநடையைப் போல் யாமும் எழுதுவது நல்லதாமா? என்பதை அவர்கள்பால் வினவ, அவர்கள் “வடசொற்கலவா உனது உரைநடையே இனியதாயும் எவர்க்கும் எளிதிற் பொருள் விளங்கத் தக்கதாயும் இருத்தலால், உனது நடைப் படியே எழுது, எனது உரைநடையைப் பின்பற்றாதே" என்று ஆணை தந்தார்கள். அவர்களின் அக்கருத்தை அறிந்தபின் முன்னமே தொல்லா சிரியர் தந்தீந்தமிழ் உரைநடையிற் பழகி அதன் சுவைகண்ட எமதுளத்திற்கு, அவர்கள் இட் டகட்டளைமிகவும் பொருத்த முடையதாகவே காணப்பட்டது. அதுமுதல் தீந்தமிழுரை நடைஎழுதுவதில் எமது உள்ளம் உறைத்து நிற்கலாயிற்று. இது கொண்டு, நாயகரவர்கள் தாம் வடசொற்கலந்த உரைநடை எழுதுவதிற் பழகிவிட்டாலும் அந்நடையில் தமக்கு விருப்ப மில்லாமல், வடசொற்கலவாச் செந்தமிழ் உரைநடையிலேயே விருப்பம் மீதூர்ந்தமை அறியப்படும். அவர்கள் தம்மைப் போலவே வடசொன்மிகக் கலந்த நடையெழுதுதலை எமக்குச் சிறிது அழுத்திச் சொல்லியிருந்தால், யாமும் அங்ஙனமே எழுதித் தமிழுரை வனப்பை சிதைத்திருப்பேம். ஆனால், அங்ஙனம் ஆகாமல் இறைவன் றிருவருளே அவர்களிடை நின்று தடுத்துத் தமிழ் நலனை ஓம்பியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/133&oldid=1587240" இலிருந்து மீள்விக்கப்பட்டது