உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

❖ 21❖ மறைமலையம் – 21

வேதாந்தப் பொருண் முடிபு தேரும் வகையின்றி அறிவு குழம்பிய நிலையிலிருந்தார்களென்பது அவர்கள் எமக்கு நேரே சொல்லிய சொற்களிலிருந்து தெரியலானேம். இவர்கள்

இந்நிலையிலிருக்கையில், மதுரை நாயகம்பிள்ளையெனப் பெயரிய ஒரு பெரியார் சிவஞானபோதம் முதலான சைவ சித்தாந்த நூல்களை அச்சிடும் பொருட்டு அந்நாளிற் சென்னையில் வந்திருந்தார். அவரை அப்போதிளைஞரா யிருந்த நாயகரவர்கள் கண்டுரையாடல் நேர்வதாயிற்று. தாமறிந்த மாயாவாத வேதாந்தப் பொருள்களையும், அவற்றின் கண் தமக்குண்டான ஐயங்களையும் நாயகர வர்கள் அப்பெரியார்க்கு எடுத்தியம்ப, அவர் இவரது நுட்ப அறிவின் றிறத்தையும் பொருளுண்மை காண்பதிற் கொண்ட ஆராவேட்கையினையுங்கண்டு மிக வியந்தவராகித், தாம் அச்சிற்பதிப்பித்து முடித்த சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலான சைவசித்தாந்த நூல்களை இவரது கையிற் கொடுத்துச் சைவசித்தாந்தப் பொருண் முடிபுகளைச் சுருக்கமாகவே இவர்க்கு அறிவுறுத்தி, "இந்நூன் முடிபு களைப் பலகாலும் ஆராய்ந்து பயின்று தெளிக” எனக் கட்டளையிட்டுச் சென்றனர்.

கரைபுரண்டோடும் ஒரு பேரியாற்று வெள்ளத்தில் வழுக்கி வீழ்ந்து ஒரு பற்றுக்கோடுங்காணாது அதனால் ஈர்க்கப்பட்டுச் செல்லும் ஒருவனுக்குச் சடுதியில் ஒரு பெரு மரத்தின் நீண்டதொருகிளை கையிற் றெற்றுப்பட அவன் அதனைப் பற்றிக் கரையேறிப் பிழைத்துக் களிப்புற்று இறைவனை வழுத்தினாற்போல, மாயாவாதக் கொள்கையிற் றவறிவீழ்ந்து அது தமக்குத் தீது செய்வதாதல் உணர்ந்தும் அதனைவிட்டு மெய்மை காண்டற்குக் கருவி காணாது அலமந்த நாயகரவர்கள் திடுமெனத் தமக்கு வாய்த்த அச் சைவசித்தாந்த நூல்களைப் பெற்று "ஈது இறைவன் எளியேற்குச் செய்த பேரருளாகும்” எனவுணர்ந்து நெஞ்சம் நெக்குருகி அவனருளை வாழ்த்தி அந்நூல்களை அல்லும் பகலும் ஓவாது பயின்று, அந்நூன்முடிபுகளை ஒருங்கேயுணர்ந்து, 'இன வையே எனது பிறவியைப் புனிதமாக்கும் மெய்ப் பொருளமிழ்தம்' என உன்னி உன்னிக் களிப்புறலானார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/143&oldid=1587250" இலிருந்து மீள்விக்கப்பட்டது