உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தர நாயகர் வரலாறு

137

உமை

.

டாலும், விஷ்ணுவோ தமக்குரிய பெண்வடிவை இடையிடையே மேற்கொண்டு சிவபிரானைக் கூடி ஐயனார் முதலான பிள்ளைகளைப் பெற்றாரெனவும் நான்முகனாகிய பிரமன் திருமாலின் கொப்பூழினின்றும் பிறந்தானெனவும் வடமொழிப் புராண நூல்களே நன்கெடுத் துரைப்பக் காண்டலின் திருமால் இறைவியாகிய பார்வதி யேயல்லாமற் பிறர் அல்லரென்பது ஐயுறவின்றித் துணியப்படும். இறைவியாகிய இறைவனோ டொத்த சிறப்பினளே யன்றி அவனிற் சிறிதுங் குறைந்தவள் அல்லள். இறைவனாகிய சிவபிரான் சிவந்த ஒளிவடிவினன், இறைவியாகிய உமை நீல ஒளி வடிவினள். தூய ஒளிவடி விற்றிரண்ட இரண்டு உருவுகளில் எஃது உயர்ந்தது; எது தாழ்ந்தது? எம்போற்றாய் வயிற்றிற் பிறக்கும் மக்களல்லரோ ஊனுங்குருதியும் மலமும் முடை நாற்றமும் நிரம்பிய அருவருப்பான உடம்பு உடையவர்கள்? நம் மக்களுள் ண்பாலார் பெண்பாலார் அனைவரும் அருவருப்பான உடம்புடையரேயாவர்; இவருள் ஆண்பாலாரை உயர்ந்த வரெனவும், பெண்பாலாரைத் தாழ்ந்தவரெனவும் நம்மனோர் பிழையாகக் கருதுவது போலச் கருதுவது போலச் சிவபிரானை உயர்ந்த வரெனவும், அம்மையைத் தாழ்ந்தவ ளெனவும் பண்டிருந்த நம் முன்னோரில் ஒரு சாரார் எண்ணியது பெரும் பிழை; மன்னிக்கப்படாத பெருங் குற்றமுமாம். அங்ஙனம் பிழையாக எண்ணியதோடு இறைவியை ஆண்வடிவான திருமால் ஆக்கி, அவ்வளவில் அமையாமல், அத்திருமாலினுஞ் சிவபிரானைத் தாழ்ந்தவ ராக்குதற்குப் பல பொய்யான புராண கதைகளையும் பின் நாட்களில் வந்த வைணவர்கள் புதிய புதிய வாய்ப் படைத்து, நம் மக்களுட் பண்டிருந்த ஒற்றுமையினையும் அன்பையுஞ் சிதைத்தார்கள். வைணவர்களால் தொழப்படும் முதலாழ்வார்கள் மூவரிற் பொய்கையாழ்வார் பேயாழ்வார் காலம் வரையிற் சைவத்திற்கும் வைணவத்திற்கும் ஏதொரு வேற்று மையும் உண்டாகவில்லை. இவ்வாழ்வார்கள் இருவரும் அருளிச் செய்த பாடல்களில், இறைவன் திருவுருவம் வலது புறத்திற் சிவபிரான் வடிவும் இடது புறத்தில் திருமால் வடிவும் ஒருங்கு கலந்து ஒன்றாகவே துலங்காநிற்கின்றது என்று தெளிவாகவே எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. பொய்கை யாழ்வார் அருளிச் செய்தமுதற்றிருவந்தாதியில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/170&oldid=1587277" இலிருந்து மீள்விக்கப்பட்டது