உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சோமசுந்தர நாயகர் வரலாறு

183

எல்லாரினும் மேலானவன். இம் மேலான தேவனுக்குமுன் எதிர்த்து நிற்கவல்லதும் ஏதுமே யில்லை: ஏனென்றால், இம் மூவுலகினும், அவனுக்கு ஒப்பானவரும் எவருமேயில்லை. போர் முனையில், அவனுக்குச் சிறிது சினத்தை மூட்டினாலும், அவனைப் பகைத்தவர் நடுக்கம் எய்தி உணர்விழந்து கீழே விழுந்து விடுகின்றனர்; பெரும்பாலும் உயிர் போக்கவும் படுகின்றனர். நடுங்கத்தக்க அவனது குரல் முழக்கம் யேற்றின் முழக்கத்தை ஒத்ததாயிருத்தலின், அதனைக் கேட்ட தேவர்களின் நெஞ்சமும் அழிந்து படுகின்றது. தேவர்களா யினும், அசுரர்களாயினும், கந்தருவர்களாயினும், பன்னகர் களாயினும், வேறெவராயினும் அவரைப், பிநாக பாணியான மகாதேவர் தமது செயிர்த்த வுருவத்தொடு நோக்குகின்றாரோ, அவர்கள் தம்மை எங்கே ஒளித்துக் கொண்டாலும், அவர் சீற்றங் கொள்ளும்போது அவர்கள் மனஅமைதியுடன் இருத்தல் இயலாது. தக்கப் பிரசாபதி யானவன் வேள்வி வேட்கப் புகுந்து, அதற்காங் கிரியைகளை ஒழுங்குபடுத்திய காலையில், மகாதேவர் சீற்றங்கொண்டு அவனது வேள்வி யினை அழிக்கக் கருதித், தமது வில்லினின்றும் ஒரு கணையினை விடுத்து, ஓர் உரத்த ஓசையினை விளைத்தனர். தேவர்கள் அதனைக் கேட்டு உளங் கலங்கிச் சோர்வுற்றனர். உடனே, வேள்வியானது அழிந்தமையாலும், மகாதேவர் பெரிதுஞ் சீற்றங் கொண்டமையாலும், அவரது வில்லின் நாண் ஓசைகேட்டு எல்லா வுலகங்களும் நிலைதடுமாறின; தேவர்களும் அசுரர்களும் துணையற்றவர்களாய்க் கீழே வீழ்ந்தனர்; நீர்நிலைகள் குழம்பின; நிலம் அதிர்ந்தது; மலைகள் நுறுங்கின; வானம் பலமுகமாய்ப் பிளவுண்டது; இருளால்

மூடப்பட்டு உலகங்கள் ஒளி இலவாயின; ஒளிதரும் உலகங்களும் ஞாயிறும் ஒளி அவிந்தன. இதனால், மிகவும் உளம் மருண்ட முனிவர்கள் தமது நன்மையையும் ஏனையெல்லா உயிர்களின் நன்மையையுங் கோரி, மகாதேவரின் சீற்றத்தைத் தணிப்பான் வேண்டி மறைமொழிகளைச் சொல்லி வழுத்தினர். அப்போது, அஞ்சத்தக்க ஆற்றலுடையவரான உருத்திரர், தேவர்கள்பால் ஓடிப், பெருஞ் சீற்றமுடையராய்ப் பகனுடைய கண்களை வெளியே தெறிக்கும்படி புடைத்தனர். மேலுஞ் சினம் மூண்டு தமது திருவடியாற், பூஷன் வேள்விப் பலியைத் தின்றுகொண்டிருக்கையில், அவனை எட்டி யுதைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/216&oldid=1587323" இலிருந்து மீள்விக்கப்பட்டது