உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

213

காண்கின் றோமேயல்லது பிறவாதவைகள் இறத்தலை யாண்டுங் கண்டிலேம்.

'பிறப்புண்டேல் இறப்புண்டாம், இறப்புண்டேல் பிறப்புண்டாம்’ என்னும் மூதறிஞர் மொழியும் இவ் வுண்மை யினையே வலியுறுத்துகின்றது. பிறந்திறப்பனவெல்லாஞ் சிற்றறிவுஞ் சிறு தொழிலுமுடைய உயிர்களென்றும், பிறந்திற வாதவன் ஒருவனே இறைவன் என்றும் பகுத்துணர்ந்து கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். இவ்வாறு உயிர் களுக்கும் இறைவனுக்கும் உள்ள வேறுபாட்டினையும் அவ் வேறுபாட்டுக்கு ஏதுவான இலக்கணங்களையுங் கடைப் பிடியாக உணர்ந்து கொள்ளவேண்டுவது பெரும்பயன் பெற வேண்டும் மக்களின் மெய்யுணர்ச்சிக்கு முதன்மையாகும். இவ்வேறுபாட்டினைக், கடவுளுக்குரிய பிறந்திறவாச் சிறப்பிலக் கணத்தை முதன்முதற் கண்டறிந்தவர்கள் சைவசமய நன்மக்களே யாவர். பழைய யூதர்களும், மகமதியர்களுந் தவிர மற்றச் சமயத்தவர்களெல்லாரும் பிறந்திறக்கும் உயிர்களையே அவ்வவர்பாற் காணப்பட்ட சில ஆண்மைச் செயல்களாற் கடவு ளாகப் பிறழ உணர்ந்து அவை தம்மையே கடவுள் நிலையில் வைத்து வணங்கி வருகின்றார்கள். ஆனால் இத் தமிழ்நாட்டின் கண் உள்ள சைவசமயத்தவர்கண் மட்டும் பண்டைக்காலந் தொட்டுப் பிறந்திறவாத் தன்மையனே முழுமுதற் கடவுளாவன் எனத் தெளிய உணர்ந்து இன்றுகாறும் அக் கொள்கையிற் சிறிதும் வழுவாதவர்களாய் நிலைபேறுற்று வருகின்றனர். பிறப்பிறப்பில்லா இக் கடவுளிலக்கணத்தை நம் சைவசமய ஆசிரியரும் பிறரும் வலியுறுத்திப் பாடிய பாட்டுக்களை முன்னரே நுங்கட்கு எடுத்துக்காட்டினேம். இன்னும் நம் சந்தானாசிரியராகிய அருணந்தி சிவனாரும்,

“யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்

வேதனைப்படும் பிறக்கும் இறக்கும் மேல்வினையுஞ் செய்யும் ஆதலால் இவைஇ லாதான் அறிந்துஅருள் செய்வ னன்றே

என்று வரையறுத்துக் கூறிய அருமைத் திருப்பாட்டும் நம்மனோர் ஒவ்வொருவர் உள்ளத்திலுங் கன்மேற்செதுக்கிய எழுத்துப்போல் நிலைபெற்று நின்று நினைவுகூரற் பாலதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/246&oldid=1587353" இலிருந்து மீள்விக்கப்பட்டது