உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

215

கவர்களாகப் பிரியுங்

மரமும் அம் மரத்தினின்று பல கிளைகளும் ஒன்றைவிட்டொன்று வேறாகாமற் பெரிதும் இயைந்து நிற்கின்றன. இங்ஙனமே ஒருவனுக்குக் கிளைகள் போல் நெருங்கிய தொடர்புடையராதற் குரியார்; அவன் தான் பிறத்தற்கு இடமான தாய் தந்தையருந், தன்னோடுடன் பிறந்த தமையன் தம்பி முதலியவருந், தம்மினின்று பிறக்கும் மக்களும், அம் மக்களினின்று பிறக்கும் மக்களுந், தன்னோடுடன் பிறந்தாரினின்று பிறக்கும் மக்களும், அம் மக்களுக்கு மக்களும் என அவனோடு நெருங்கிய உறவு வாய்ந்தாரே யாவர். மற்றச் சுற்றத்தார் உறவினர் கேளிர் என்பவரெல்லாம் அவனுக்கு அத்துணை நெருக்கம் உடையா ரல்லர். அதுபற்றியே தான் ஒருவனுக்கு மிக நெருங்கிய உடம்பின் தொடர்புடையாரைக் குறித்தற்கு மாணிக்க வாசகப் பெருமான் கிளையென்னுஞ் சொல்லைச் சிறந்த தொன்றாக எடுத்துக் கொண்டார்.

இனி, இறைவன் தான் பிறத்தற்கு இடனான தாய் தந்தையருந், தன்னோ டுடன்பிறந்தாருந், தனக்கு மக்களா வாரும், அம் மக்களுக்கு மக்களாவாருந், தன்னுடன் பிறந் தார்க்கு மக்களாவாரும், அம் மக்களுக்குப் புதல்வராவாரும் இல்லாதவ னென்பது முன்னமே பெறப்பட்டமையால், அத்தகைய நெருங்கிய சுற்றத் தொடர்பு சிறிதுமில்லாதவன் என்பதை அறிவித்தற்கே கிளையிலான் என்றார். கிளைஞராகிய பெருந்தொடர்பு இல்லாதவர்களுக்கு அத் தொடர்பு பற்றி வரும் மற்றைச் சுற்றத்தாரும் இல்லாமை தானே பெறப் படுமாதலால், இறைவனுக்கு வேறு அகன்ற சுற்றத்தாரும் இல்லை என்பது இது கொண்டு முடிக்கப்படும். நெருங்கிய உடம்பின் தொடர்பி லிருந்தே ஏனை எல்லாச் சுற்றங்களும் அச் சுற்றங்களைப் பற்றி வரும் பல்வேறு அல்லல்களும் ஒன்றிலிருந் தொன்றாய்க் கிளைக்கக் காண்டலால், அவ் வெல்லாவற்றிற்கும் அடிப்படையான உடம்பின் தொடர்பினை இறைவன் ஒரு சிறிது மில்லாதவன் என்பது தெரித்தற்கே உடம்பின் தொடர்பு க்குப் பெயரான கிளையென்னுஞ் சொல்லை எடுத்தாண்டு அச் சொல்லால் எவ்வகைத் தொடக்குமில்லாத இறைவனியல்பைச் சுருங்கச் சொல்லல் ஆழமுடைத்தாதல் என்னும் அழகு பெறக் கூறிய அடிகளின்அறிவின் திறத்தை என்னென்பேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/248&oldid=1587355" இலிருந்து மீள்விக்கப்பட்டது