உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

233

கதவடைத்துக் கொண்டு தாமாகவே இருந்துண்கின்றனர். ரோ ஒருகால் தமக்குரிய சுற்றத்தவரோடு உடனிருந்து அவர் உண்ணுதலையுங் காண்கின்றோமே என்றால், மக்கட் பிறவி எடுத்தாரெல்லாம் ஒரே வகையான உடம்பினமைப்பும் ஒரேவகையான பகுத்தறிவுணர்ச்சியும் உடையராயிருக்க, அப்பெருந் தொகையினரில் ஒருசிலரைத் தமக்குச் சுற்றத்தவ ரென்றும், ஏனைப்பலரைத் தமக்குச் சுற்றமல்லாதவரென்றும், ஒரு சிலரை உயர்ந்த சாதியாரென்றும், ஏனைப்பலரை இழிந்த சாதியாரென்றுந், தமக்குள்ளே பலபிரிவுகளையும், பல வேற்றுமைகளையுந் தாமாகவே கற்பித்துக் கொண்டு, உயர்ந்த நோக்கமும் உயர்ந்த செயலுமின்றி வெறுஞ் சோற்றுப் பேச்சுப் பேசிப் பெருஞ் சோற்றுச்சண்டையிடுதலையும், அதனால் ஒன்றுகூடி உழைத் தலும் பொது நன்மைக்காகப் பாடுபடுதலும் இலராய் வாணாளை வீணாளாய்க் கழித்து மாள்கின்றன ராதலின், அன்பில்லா இத்தகையமக்கட் பிறவி நாய்ப்பிறவியோ டொப்ப இழிந்ததாத லைக் காண்கின்றன மல்லமோ?

இங்ஙனமே அவர்கள் காமப்பசிதீர்க்க முயலும் முயற்சி யிலும் ஒரு பெண்னை அவளுக்கேற்ற கணவனொடு பொருத்தா மலும், ஓராணை அவனுக்கேற்ற மனைவியொடு பொருத்தா மலுந், தத்தம் இனத்திலேயே தத்தஞ் சுற்றத்திலேயே பெண் கொள்ளலுங் கொடுத்தலும் வேண்டுமெனத் தாந்தாமே கற்பித்துக் கொண்ட போலிக் கட்டுப்பாட்டாற், கற்றுவல்ல ஓர் இளைஞனுக்குக் கல்லாதவளொருத்தியையுங், கற்றுவல்ல ஒருத்திக்குக் கல்லாதானொருவனையும், அழகுமிக்க ஒருவனுக்கு அழகில்லாளொருத்தியையும், அழகுமிக்க ஒருத்திக்கு அழகில் லான் ஒருவனையும், பேதைப் பருவச் சிறுமிக்குக் காதலில்லாக் கிழவனையும் பிணைத்துவிட்டு அவர் தம்மையெல்லாஞ் சாகுமளவும் நாய்போற் சண்டை யிட்டு நலமிழந்து நிற்கச் செய்கின்றனர்களல்லரோ? இன்னும் பலர் பிறர்க்கு அடிமையாகி அவரிட்ட எச்சிற் சோற்றையுண்டும், அவர்பொருட்டு அவர்க்குப் பகையாயினா ரொடு போர் செய்து அவர்களைச் செந்நீர் ஒழுக மடித்தும் நாய்ப் பிறவியோடொப்ப நாட்கழிக்கின் றார் களல்லரோ? இன்னும் பற்பலர் பிறவுயிர்களின் துன்பத் தைச் சிறிதுங் கருதிப் பாராது, அவ்வுயிர்களைக் கொன்று அவ்வாற்றால் வரும் ஊனையுண்டு உண்டு வன்னெஞ்சராய் வாணாட் கழிக்கின்றன ரல்லரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/266&oldid=1587373" இலிருந்து மீள்விக்கப்பட்டது