உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் – 21

மேலும் பலர் தமக்கியைந்த மனைவியரோடு அன்பால் அளவளாவி வாழாது வரை துரையின்றி வேசி யரையும் பிறரையும் கூடிக்களித்துப் புண்ணும் படையுந் தொழுநோயுங் கொண்டு புழுத்தழிகின்றன ரல்லரோ? இவ்வாறெல்லாம் மக்கட் பிறவியெடுத்தார் அப்பிறவிப் பேற்றைப் பாழாக்கி நாய்ப் பிறவியோடொப்ப நலனிழந்து நிற்றலை நாம் நம் கண்ணெதிரே காண்கின்றன மாகலின், இத்தகைய மக்கட் பிறவியானது நாய்ப் பிறவி யோடொப்ப இழிந்ததாதல் கண்டே, நம் பெருமான் மாணிக்க வாசகர் இம்மக்கட் பிறவியை நாய்ப்பிறவியோடொப்புமைப் படுத்திக் கூறுவாராயினர்.

அங்ஙனங் கூறியவிடத்தும், அத்தன்மையரான மக்களைத் தாம் இழித்துப் பேசுதற்கு மனம் பொருந்தாராய், அவர்களின் இயற்கையைத் தம்மேலேற்றித் தம்மையே இழித்துப் பேசி அவர் பாடி யிருப்பது மிகவும் பாராட்டற் பாலதாயிருக்கின்றது. கடவுளிடத்து மெய்யன்பு பூண்டு ஒழுகும் அருளாளர்கள் எல்லா உயிர்களிடத்தும் எல்லா மக்களிடத்தும்--அவர்கள் எத்துணை இழிந்தோராயினும் அல்லது எத்துணை உயர்ந்தோ ராயினும் அவர்கள்பால் விருப்பு வெறுப்புக் கொள்ளாது, அன்பும் இரக்கமுமே கொண்டு ஒழுகுவரென்பதற்கு ஈது ஒரு பெருஞ் சான்றாய் விளங்குகின்றது. மாணிக்கவாசகர் மக்களு டம்பில் தோன்றினாராயினும் அவர் ஏனை மக்களைப் போலாது, அம் மக்களின் வேறான தனிப் பெருஞ்சிறப்புந் தனிப்பெருந் தெய்வமாட்சியும் உடையரென்பது அவரருளிச் செய்த திருவாசகத்தை ஒரு சிறிது உற்று நோக்குவார்க்கும் நன்குபுலனாம். மாணிக்கமுங் கூழாங்கல்லுங் கல்வடிவில் ஒத்திருப்பினும், மாணிக்கங் கூழாங்கல்லின் வேறான தனி ஒளியும் அழகும் பெருவிலையும் உடைத்தாதல் போலவும், நெகிழ்ந்தவடிவில் நீருந் தேனும் ஒத்திருப்பினுந் தேனானது நீருக் கில்லாத தீஞ்சுவையுந் தெளிவும் நிறனு முடைத்தாதல் போலவும், ஒளியுடன் மின்னும் வான்மீன்களும் முழுமதியும் ஒரு சிறிது ஒப்புமையுடையவாயினும் முழுமதியானது வான் மீன்களுக்கு இல்லாக் குளிர்ந்த தனிப்பேரொளியும் அழகு முடைத்தாய் விளங்குதல் போலவும், மாணிக்கவாசகப் பெரு மானும் ஏனைமக்களுக்கில்லா அருட்பேரொளிவீசி அருள் விசும்பிற் குறையாது திகழும் முழுமதியமே ஆவரென்பது திண்ணம். எல்லாம்வல்ல சிவத்தைக்கண்டு சிவமாயே அமர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/267&oldid=1587374" இலிருந்து மீள்விக்கப்பட்டது