உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

❖ - மறைமலையம் – 21

நாட்டை அரசாண்ட செங்கோன் என்னும் வேந்தன் மேற் பாடப்பட்ட பண்டைத் தமிழ்ப் பெரும்பனுவலாகிய செங்கோன்தரைச் செலவு என்னும் நூலின் முகத்திற் கதிரவன் தெய்வமாக வைத்து வழிபாடு செய்யப்பட்டிருப்பதே யாங் கூறும் உண்மைக்கு உறுபெருஞ்சான்றாம். இங்ஙனமாக, நம் பண்டைத்தமிழ் நன் மக்கள் கீழ்பாற்றோன்றுங் கதிரவன் விளக்கத்தைக் கண்ட காலத்து, அக் கதிரவன்மேனி சிறந்த நிறமுடையதாய் மினுமினு வென்று திகழா நிற்கவும், அவனுக்குக் கீழே தோன்றுங் கடலானது பச்சை மஞ்சள் ஊதா கறுப்பு பொன்மை முதலான பல நிறங்களும் ஒருங்கு கலந்த காழுவிய நீல நிறமுடைத்தாய்த் தோன்றவும், இக் கடலுக்குங் கதிரவனுக்கும் இடையிலும் பின்னும் மேலும் உள்ள வான்வெளியெல்லாம், அப் பல்வேறு நிறங்களொடு விராய பச்சைப் பொன்நிறமுடைத்தாய் விளங்கா நிற்கவும் நோக்கி வியந்து, அத் தோற்றம், அழகிய நீலத் தோகை மயில்மேல் அமர்ந்து விளங்கும் எழில் மிக்க ஓர் இளைஞன்றன் றோற்றத்தோடு ஒத்திருத்தலை உணர்ந்தனர். இவ்வாறு அத் தோற்றத்தின் அழகானது தமதுள்ளத்தைக் கவர்ந்து, அதன்கண் நிலைபெற நிலைபெற, அவர்கள் மயின்மேலிருக்கும் ஓர் ளைஞனாகவே கொண்டு இயற்கையில் விளங்கும் அத் தெய்வ ஒளியினை வழிபட்டு வரலாயினர். விடியற்காலையிற் கீழ்பாற்றோன்றும் ஞாயிற்றின் எதிரே கீழ் நிற்கும் பசுங்கடலானது ஒருமயிலினுருவத்தை ஒத்திருத்தலும், அதன் மேற் றோன்றுஞ் சிவந்த இளவளஞாயிறு அம் மயின்மேல் அமர்ந்திருக்கும் ஒரு தெய்வ இளைஞனை ஒத்திருத்தலுங் கண்ட ன்றோ, ஆசிரியர் நக்கீரனார் தாம் அருளிச் செய்த திருமுருகாற்றுப்படை முதலிய முருகப்பிரான் மயின்மேன் அமர்ந்திருக்குந் தோற்றத்திற்குக் காலை ஞாயிறு கடல்மேற் றோன்றுங் காட்சியினையே உவமையாக எடுத்து,

“உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்குஞ் சேண்விளங்கு அவிரொளி,”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/329&oldid=1587436" இலிருந்து மீள்விக்கப்பட்டது