உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299

17. திருமாலின் திருவுருவ உண்மை

L

இனிக், காலையிலெழுந்து ஞாயிறு காலைப் பத்துமணி வரையில் வான்வெளியை ஒருகூறு அளந்து, பத்துமணி முதல் இரண்டு மணி வரையில் அவ்வொளியின் நடுக் கூற்றினை அளந்து, இரண்டு மணி முதல் மாலை ஆறுமணி வரையில் அதன் மற்றொரு கூற்றினை அளந்து இயங்குவதாகிய இயக்கமே திருமால் மூவடியால் மூன்றுலகு அளந்தார் என்னுங் கதையின் உண்மைப் பொருளாம். எனவே, வான்வெளியினை மூன்று பொழுதில் மூன்று கூறாய் அளக்கும் பகலவனில் விளங்கா நின்ற முதல்வனே திருமாலெனப்பட்ட னனன்றி வேறல்லன். இவ்வாறன்றி மாவலி பால் மூவடிமண் இரந்து கேட்டு அவனை ஏமாற்றிக் கீழும் நடுவும் மேலுமென்னும் மூன்றுலகுந் திருமால் தன்னடியால் அளந்தானென்னுங் கதையும், அவன் பத்துப்பிறவி களெடுத்தான் என்னுங் கதையும் இறைவனிலக் கணத்துக்கு ஏலாவாய் அருவருப்புகள் பல நிறைந்திருத்தலின் அவை அறிவுடையோரால் விலக்கற்பாலனவாமென்க. வான் வெளியை மூன்றுகூறாய் அளக்கும் பகலவனே விஷ்ணு என்னும் பெயரால் இருக்கு வேதத்தின் கண்ணும் நுவலப்படுதலின், பகலவனில் விளங்கும் இறைவன் வழிபாடே திருமால் வழிபாடாய்ப் பண்டைக்காலத்துச் சான்றோரால் தழுவப் பட்டமை கண்டு கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/332&oldid=1587439" இலிருந்து மீள்விக்கப்பட்டது