உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

23

னறிவு மருண்டு குற்ற மல்லாதவற்றைக் குற்றமென முறை பிறழக் கொண்டுரைத்திட்டார். அவர் குற்றமாராய்ந்ததுபோற் குணஞ்சிறி தாராய்ந்து மறுத்திலாமையான் அவர் உள்ள வாறாராய்ச்சி செய்தற் குரிமையுடையா ரல்ல ரென்பதூஉம் அவரொரு போலிப்புலவ ரென்பதூஉ மறிவுடையார்க் கெல்லாம் புலனாமாதலின், அவரெழுதிய குற்றங்கண்டு பிறர் மயங்காமைப் பொருட்டு நிறுத்த முறையே யவற்றை யாராய்ந்து பரிகரித்திடுவாம்.

பொருளிலக்கணம்

இனிப் பொருளிலக்கண மென்பது, மக்களுயிர்க் குறுதியென நல்லறிவுடைய தொல்லாசிரியர் வகுத்தெடுத்துக் கொண்ட அறம் பொருளின்பம் வீடென்பனவும், இந்நாற் பகுதியினு மடங்கி யடங்கு வனவாகிய* (நச்சினார்க்கினியம்) “முதல்கரு வுரியும், காட்சிப் பொருளுங் கருத்துப் பொருளும் அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும் பூதமும், அவற்றின் பகுதியாகிய இயங்கு திணையும் நிலைத்திணையும் பிறவு" மாகிய பொருண் முழுவதூஉம் ஒருங்கெடுத்துக்கொண் டவற்றைக் கூறுபடுத்துரைத்து விளக்க முறுவதாகிய விழுமிய இயலாகும். இதுதான் செந்தமிழ்த் தனி மொழியிலன்றிப் பிற மொழிகளி லித்துணை நுண்ணிதாக மதிவளம் பெருக்கி யெழுதப்பட்டதூஉ மின்று; அதனை யாராயு நூல்களுங் கிடையா. இதனாற் பண்டைக் காலத்துத் தமிழாசிரியர் நுட்ப வறிவும் பரந்த வுணர்ச்சியும் உலகிய லறிவும் நன்றறிவுறுக்கப் படுதல் காண்க.

இனி, அங்ஙனம் விரிந்து கிடப்பனவாகிய நுண்பொருட் பரவை யெல்லாந் தமிழ்நூன்மரபு பற்றி யாராய்து மென மனவெழுச்சி கொண்டு புகுவார்க்குச் சிறுகிய வாழ்நாளும் பெருகிய பிணியு முண்மையின், பெருந்தவத் தொல்லாசிரியர் அருட்குறிப்பு நிகழ வவர்க்கவற்றைச் சுருங்க வறிவுறுத்துவார், அப்பொருட் பரவையை யிரண்டு கூறு படுத்து அகத்திணை, புறத்திணை யெனப் பெயர் நிறீஇ, அப்பகுதி யிரண்டனு ளுலகியற் பொருண் முழுவதூஉம் பிறவுஞ்செறியத் துறுத்து விளக்குவாராயினர். இங்ஙனம் பொருளிய றெரிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/56&oldid=1587163" இலிருந்து மீள்விக்கப்பட்டது