உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

4.ஆவணி மூலத்திற் குதிரை வருமென்றல்

ஃதிவ்வாறிருப்ப, அடிகளோடு உடன்போந்த ஏவலாளர், அவர் தம்மை மறந்து அன்பால் என்புநெக் குருகிக் கண்ணீர்வார ஆடுதலும் பாடுதலுஞ் செய்து மால்கொண்டார் போலிருத்தலைக் கண்டு ‘இவர் பித்துப் பிடித்தவரானார்’ எனக் கருதி, அவரை விட்டுப் பிரிந்து, மதுரையிற் பாண்டியன் பாற் சென்று அவனுக்கு அடிகளின் வேறுபட்ட நிலையை அறிவித்தார். அதுகேட்ட அம்மன்னன் அடிகளின் உண்மைநிலை யுணராமே புடைபடக்கவன்று, நாணாளுந் தன் ஒற்றரை விடுத்து, அடிகள் உணர்வு தெளிந்திருக்கும் நிலையை அவரால் தெரிந்து கொண்டபின், “தென்னவர் பரவுந் தென்னவன் எழுதும் ஓலை தென்னவன் பிரமராயர் காண்க! பொன் நிறைந்த பொருட் களஞ்சியத்திற் பல பொருள் எடுத்துக்கொண்டு பரித்திரள் கொள்வதற்குப் பரிவொடு சென்ற நீர், இன்னுந் திரும்பி வந்திலாமை யாது நினைந்து? அமைச்சற்கு இப்படிச் செய்தல் தக்கதாங்கொல்! இது காண்டலும் வலிமை மிக்க வாம்பரித்திரள் கொண்டு விரைந்து வருதலே செயற்பாலது; இல்லையேல் அது நுமக்குப் பழுதாம்” என்றெழுதி அடிகட்கு ஒரு திருமுகம் விடுத்தான். அதனை எடுத்துவந்த தூதுவர் அதனை அடிகள்பால் உய்க்க, இப்போது தமது புறத்துணர் வோடும் இருந்த அடிகளும் அதனை வாங்கிப் பார்த்துத் துணுக்குற்றுத், தாம் குதிரைத் திரள் கொள்ளும் பொருட்டுப் பாண்டியனது பெரும் பொருள்குவையை எடுத்துவந்த தமது முன்னைவகையெல்லாம் நினைவு கூர்ந்து உள்ளஞ் சிறிது கலங்கிப், பின்னர்த் தாம் தம்மையாண்ட ஐயன் அருள்வழி யொழுகினமை நினைந்து தேறி, தங் குருமுதல்வன் எழுந்தருளிய குருந்தமரத்தினெதிர்சென்று தங்குரவனைத் தமது அகக் கண்ணிற் கண்டு தொழுது அழுது தமது குறையறிவிப் பாராயினர்; "அருள்வளர் விளக்கே, ஏழை அடியேனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/102&oldid=1587548" இலிருந்து மீள்விக்கப்பட்டது