உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம்

22

'இரும்பையொத்த மனத்தினையுடைய என்னை இழுத்து இழுத்து, என் என்பினையும் உருகச்செய்து, கரும்பின் சாற்றை யொத்த பேரின்பச் சுவையை நின்றிருவடித் துணைகளால் எனக்குக் காட்டியருளினை; அஃது ஒன்றோ, முழுதுங் கங்கைநீர் உலவுஞ் சடையினை உடையானே! நரிகளையெல்லாம் பெருங் குதிரைகளாக்கிய வாற்றானும் அந்நாளில் உனது பேரருளை எனக்குக் காட்டினை' என்றும் பொருள் தந்து அடிகள் பொருட்டே இறைவனால் நரிகள் பரிகளாக்கப்பட்டன என்னும் உண்மையினை நன்கு வலியுறுத்திக் காட்டுதல் காண்க; மூன்றாஞ் செய்யுளின் ஈற்றடிகட்கு 'நரிகளையெல்லாம் பெருங் குதிரைகளாக்கிய வகையானுமன்றோ, உனது பேரருளை எனக்குக் காட்டினை' என்று பொருளுரைப்பினும் ஆம்.அவ்வரிய பெரிய மேற்கோள்களாலும் அடிகள் வரலாற்றினைக் கூறும் எல்லாப் புராணங்களாலும் 'நரியைக் குதிரையாக்கிய' திருவிளையாடல்' அடிகள் பொருட்டாகவே ஒருகாலத்து ஒரு முறையே நிகழ்த்தப்பட்டமை வெள்ளிடை மலைபோல் இனிது விளக்கிக்கிடப்பவும், இவற்றுக்கெல்லாம் முற்றும் மாறாக ஏதொரு மேற்கோளும் இன்றி 'நரியைப்பரியாக்கியது' அடிகள் பொருட்டாகவன்றி அவர்க்கும் முற்பட்ட காலத்தே பிறிதொன்றும் நிகழ்ந்திருக்கலாம் எனத் தமக்குத் தோன்றிய வாறே பிழைபடக் கூறிப் பெரிது மகிழ்வாருஞ் சிலர் உளர். ஒரு மேற்கோடானும் இன்றி முன்னை நூல்கட்கெல்லாம் முழுதும் முரணாகக் கூறும் இவரது பிழையுரை தான் ஆராய்ச்சியுரை போலும்! இவர் தம் இப் பிழைபாட்டுரையை அறிவுடையார் கண்டு நகுதலே செய்வராகலின் அதுபற்றி வரக்கடவதோர் இழுக்கின்று. இப் பிழைபாட்டுரையின் இயல்பை, அடிகள் காலம் இதுவென்று வரையைறுக்கும் மூன்றாம் பகுதியிற் பரக்க ஆராய்ந்தொழிப்பாம்.

இனி, இறைவன் பதிமீதிவர்ந்து வராநிற்ப, அடிகளோ தாம் பிறந்தருளிய திருவாதவூரின்கண்ணே சிறையில் இடப்பட்டு வருந்தாநின்றார். அடிகள் திருப்பெருந்துறையினின்றும் மீண்டபின்,பாண்டியனுக்கு அமைச்சராயிருந்து அரசாளுதலில் விருப்பில்லாமையின், மதுரைமா நகரில் இருத்தலைவிட்டுத் தமது திருவாதவூரில் தமது உரிமை மனையகத்தே வந்திருந்தாரென்பதும், திருப்பெருந்துறையிற் குதிரைகள் இல்லாமையை வேவுகாரரால் உணர்ந்த பாண்டியன் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/111&oldid=1587557" இலிருந்து மீள்விக்கப்பட்டது