உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

  • மறைமலையம் 22

பணிசெய்தொழுகுமாறு கடைக்கணித்தருளல் வேண்டும்!” என்று கண்ணீர்வார அழுது குறையிரந்தான்.

அச் சொற்களைச் செவிமடுத்த அடிகள் தாம் அமைச் சுரிமையினின்றும் நீங்கித் திருப்பெருந்துறை செல்லுதற்கு இதுவே வாய்ப்பான நேரமெனத் தேர்ந்து எழுந்து, “மன்னர் பிரானே! நுமக்கு யான் அமைச்சனாயிருக்கப் பெற்றமையா லன்றோ நாய்க்குத் தவிசு இட்டாலென்ன யான் இங்ஙன மெல்லாம் என் ஆண்டவன் திருவருட்பேற்றிற்கு உரியனாகப் பெற்றேன். நீர் என்னை இவ்வமைச்சுரிமையினின்றும் விடுவித்து, யான் திருப்பெருந்துறைக்கு ஏகுமாறு விடை கொடுப்ப தொன்றே எனக்கு அரசவாழ்வு அளிப்பதாகும்,” என்றார். அதுகேட்ட மன்னவன் அவரைப் பிரிதற்கு ஆற்றானாய் மிக வருந்தி, எல்லா வுலகங்களுக்கும் உயிர் களுக்கும் முதலரச ராகிய சிவபெருமான் றிருவடிகளைச் சார்ந்த மெய்யடியராகிய அவர் இனித் தன்பால் இரார் என்பதைத் தெளியவுணர்ந்து, "தேவரீர் திருவுளப்பாங்கின்படியே செய்தருளுக!” என்று கூறி, அவர் திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சித், தன் அரண்மனைக்கு ஏகினான்.

அதன் பின் உடனே, அடிகள் தாம் அணிந்திருந்த அமைச்சர்க் குரிய கோலத்தைக் களைத்து, சிவபெருமான் திருவடித் தொண்டுபேணும் நற்றவக்கோலம் பூண்டு, ஆலவாய் அண்ணலுழைச்சென்று அன்பால் அகங் கரைந்துருகி யேத்தி விடைகொண்டு, தம் பெருமான் தம்மைக் குருவடிவிற் போந்து ஆண்டருளிய திருப்பெருந்துறைக்கு விரைந்தேகினார்.

இவ்வளவில், நம்பியார் திருவிளையாடல் அடிகள் வரலாற்றைக் கூறி மேல் நடப்பனவற்றை இரண்டு செய்யுட் களிற் பாடி முடித்துவிட்டது. பரஞ்சோதி து. பரஞ்சோதி முனிவரோ, மதுரையை விட்டகன்றபின் அடிகள் சிவபிரான் திருக் கோயில்கள் பலவும் இறைஞ்சிக் கடைப்படியாகத் தில்லை யம்பலஞ்சென்று புத்தரை வழக்கில் வென்று சிவபிரான் றிருவடிநீழல் எய்தினாரெனப் பின்வரலாற்றைச் சுருக்கி முடித்துவிட்டார். மற்றுக் கடவுண்மாமுனிவர் இயற்றிய திருவாதவூரர் புராணம் மட்டுமே அடிகளின் பின்வரலாற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/139&oldid=1587585" இலிருந்து மீள்விக்கப்பட்டது