உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

உள்

மறைமலையம் 22

என்று மாணிக்கவாசகப் பெருமானும் அருளிச்செய்திருக்கும் அருளுரைகளால் நன்கு தெளியப்படும். இவ்வாறு மக்கள் உள்ளத்தில் இயற்கையாகவே ஊடுருவிப் பாய்ந்து வேரூன்றி நிற்கும் உண்மைக் கொள்கைகளுக்கு மாறாய்ப், பெளத்த மதத்தினர் உயிரும் இல்லை, கடவுளும் இல்லை என்று கூறினால் அவைகள் அவர்கள் உள்ளத்தில் ஏறுமோ? உயிர் என்பதே ஒன்று இல்லையானாற், பின்னை ‘நான் துன்பத்தை அடைகின்றேன்’ என்று சொல்வதும், 'அத் துன்பத்தை நீக்க நான் முயலல் வேண்டும்' என்று கருதுவதும் யாது? அற்றன்று, உண்மையில் இல்லாத உயிர் அறியாமையால் தன்னை ‘உயிர்’ என்னும் ஓர் பொருளாகக் கருதிப் பிழைபடுகின்ற தெனின் இல்லாத உயிர்க்கு அறியாமை எங்கேயிருந்து வந்தது? அவ்வுயிர் தான்நினைப்பனவுஞ் சொல்வனவும் முயல்வனவும் எல்லாம் அறியாமையேயாயின், அவ்வறியாமையின் வேறாய் அதனை நீக்கிக் கொள்ளவல்ல அறிவுடைய உயிர் என்பதொன்று இல்லாமை உண்மையேயாயின், அறியாமை அறியாமை ஒன்றுமே எங்குமுள்ள மெய்ப்பொருள் ஆம் என்பதும், அவ்வறியாமையின் வேறான அறிவும் அதனையுடைய உயிரும் இல்பொருள் களேயாம் என்பதும் பெறப்பட்டுப், பௌத்தராகிய நீர் கூறுவனவெல்லாம் முழுதும் அறியாமையேயாய் முடிந்து, இவ் வறியாமையைக் கூறும் நீவிர் என்றும் இல்லாத வெறும் பாழாம் என்றும் கொள்ளுதற்கு இடன் உண்டாம் அன்றே? நீவிர் கூறுவனவெல்லாம் வெறிய அறியாமையாய், நீவிரும் வெறும் பாழாய் ஒழிந்தவழி, நீவிர் பிறவுயிர்களின் துன்பத்தைத் துடைத்தற்கு வழிகாட்டுகின்றேம் என்றுரைப்பவெல்லாம் முன்னொடுபின் முரணான வெறும் போலியுரைகளாமன்றே? என்று இங்ஙனமெல்லாஞ் சொல்லிச் சிறிதறிவுடையாரும் பௌத்தமதக் கொள்கைகளை மறுத்து அவற்றை ஒரு பொருட்படுத்தாது போவர்.

இவ்வாறு உலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் மாறான பொய்க் கொள்கைகளைக், கோதமர்க்குப் பின்வந்த அவர்தம் மாணாக்கர்கள் திறப்பாக வெளியிட்டுச் சொல்லி வந்தமையினாலே தான், கோதமர் காலந்துவங்கி ஒரு முந்நூறாண்டுகள் வரையில் எங்கும் பரவிவந்த பௌத்த மதமானது வரவரத் தன் ஒளி மழுங்கிச் சுருங்கலாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/223&oldid=1587670" இலிருந்து மீள்விக்கப்பட்டது