உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் 22

வற்றைக் கூறாது விடுதலுங் கைக்கொண்டு நடத்தலானும், விரிந்த நூல்கள் அச்சிறப்புக்களையும் அவற்றினும் குறைந்த சிறப்புக்களையும் ஒருங்கு விளக்கிச் செல்லலானும் என்பது இறைவன் திருச்சிலம்போசை கேட்குந் தனிப்பெருஞ் சிறப்பு ஏனைச் சிறவாவற்றைப்போல் விடற்பாலதன்றாகலின், அது தன்னைத் ‘திருத்தொண்டர் திருவந்தாதி' சேரமான் பெருமாள் வரலாற்றில் எடுத்துரையாது விட்டமை பெரிதுங் கருத்துறற் பாலதாம். அதனால் சேரமான் பெருமாள் நாயனார்க்கு முன்னிருந்தோரான சேரமன்னருள் ஒருவரேதாம் இயற்றும் வழிபாட்டு முடிவின்கண் இறைவன் காற்சிலம்பொலி யினைக் கேட்டவராதல் வேண்டும். அது பற்றியே அக் குறிப்பு ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிக் கண்ணதாகிய 'கல்லாடத்’ தின்கட் காணப்படுவதாயிற்று; இக்கல்லாடநூல் சுந்தரமூர்த்தி தோழரான சேரமான் பெருமாட்குப் பிற்பட்டதாயின் சுந்தரமூர்த்தி நாயனார்க்குச் சேரமான் பெருமாள் தோழராம் உரிமையினை உரையாது விடாது.

அற்றேற், பழைய சேரமன்னருள் அங்ஙனம் இறைவன் திருவடிச் சிலம்போசை கேட்டார் யாவர் எனவும், அது காட்டாக்கால் எமதுரை கொள்ளற்பாலதாமோ எனவும் எதிர்ப்பக்கத்தவர் ஒருவர் வினவினார். பழைய சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறுகளை முறையாக வகுத்துக் கூறும் நூல்கள் உளவாயினன்றே அவ்வாறு வினா நிகழ்த்தலாம். எம் முன்னோரோ, வரலாற்று நூல்களின் அருமை தெரிந்து அவற்றை வரைந்துவைக்குங் கடப்பாடு உடையரல்லர். அதனாற் பண்டைக் காலத்திற் செங்கோல் ஓச்சிய அரசர்கள் வரலாறும், அவர் காலத்திருந்த புலவர்கள் வரலாறும், அவரியற்றிய நூல்களின் வரலாறும், அவ்வக்காலத்து மக்களின் நடையுடை நாகரிக வரலாறும் பிறவும் முறையாக உணரப் பெறுகின் றிலேம். பண்டைநாளில் இயற்றப்பட்ட எண்ணிறந்த அருந்தமிழ் நூல்களில் இறந்தனபோக, எஞ்சியிருந்தன வற்றுள்ளும் அச்சியற்றி வெளிப்படுத்தப் பட்டனவற்றின் கணிருந்து அரிது முயன்று திரட்டப்படுங் குறிப்புக்கள் சில பலவற்றைக் கொண்டே பழைய வேந்தர், புலவர்கள், நூல்கள், மக்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/259&oldid=1587706" இலிருந்து மீள்விக்கப்பட்டது