உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் - 22

எல்லாத்தொழில் களையும் தானே மேற்கொண்டு நடத்த லாயிற்றென்று கூறுதற்கே ஒப்பாம்.

ஒரு பிள்ளை கருக்கொண்டு முதிர்ந்து பிறத்தற்கும், பிறந்து உடம்பும் உணர்வும் வளர்ந்து முற்றுதற்கும் முற்றியபின் அறிவாற்றல்களுடைத்தாய்த் தன்னை ஈன்றார் நடாத்திப் போந்த அரசியல் முறைகளைப் பையப்பைய ஏற்று அவர் தம்மை ஓய்ந்திருக்கவிட்டுத் தானே அம்முறைகளை முழுதும் நடத்துதற்கு மெல்லாம் மெல்லமெல்ல நீண்டகாலஞ் செல்லல் வேண்டுமன்றே அப் பிள்ளை பிறந்து வளர்ந்து முற்றுங்காலம் வரையில் அதனை ஈன்றோரும் உடனிருக்கக் காண்டுமன்றே. இங்ஙனமே, கலித்துறை விருத்தம் என்னும் மகவுகளும் பழைய தமிழ்ப் பாக்களாகிய அன்னையரின் அகட்டினின்றுந் தோன்றி வளருங்காலத்து அவ்வன்னையரோடு உடனுறைந்து வளர்ந்து முற்றி ஏழாம் நூற்றாண்டில் நிலைபெறுதற்குங் காலம் வேண்டுமன்றோ. அதனால், கலித்துறை விருத்தம் முதலான புதுப்பாக்கள் ஏழாம் நூற்றாண்டின் துவக்கதிற் கதுமெனத் தோன்றிப், பழைய பாக்களை முற்றும் அகற்றித் தாமாகவே நிலைபெற்றன வென்றல் சிறிதும் அடாத உரையாமென்க.

ஆதலால், மூன்றாம் நூற்றாண்டு துவங்கி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிற் சென்ற நானூறு ஆண்டுகளில், இப் புதுப்பாக்கள் பழைய பாக்களினின்றும் பிறந்து பின்னர் அவற்றோடு உடனிருந்தே வளர்ந்து, அதற்பிற் றேவார காலத்தில் நிலைபெற்றனவாதல் வேண்டும். இவ்வாறு வை வளர்ந்து வந்தமுறை 'திருவாசகம்' ஒன்றிலன்றி, வேறெந்த நூல்களினுங் காணப்படமாட்டாது. திருவாசகத்திற் பழந்தமிழ்ப் பாக்களே முனைந்து நிற்கப், புதுத் தமிழ்ப் பாக்களாகிய கட்டளைக் கலித்துறையும் விருத்தமும், தம் அன்னையரின் ஊடே ஊடே மருங்கில் விளையாடும் மகாரையொப்ப. அவற்றினிடை யிடையே தோன்றுகின்றன. இவ்வாறு திருவாசக காலத்திற் றோன்றிய இவை, பின்னர் மெல்ல மெல்ல வளர்ந்து தலையெடுத்துப் பழந்தமிழ்ப் பாக்களை வழக்கு வீழ்த்தித் தேவார காலத்தில் தாமே முற்றும் நிலைபெறலானமையால், இவை இத் தேவாரகாலத்திலேதான் கதுமெனத் தோன்றினவென்றல் சிறிதும் ஏலா வுரையாமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/305&oldid=1587858" இலிருந்து மீள்விக்கப்பட்டது