உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் 22

புகழோங்கிய தனியரசு நடாத்தினமை இனிது விளங்கா நிற்கின்றது. தமிழ்நாடு தவிர இந்தியநாடு முழுமையும் செங்கோல் ஓச்சிய அசோக அரசனுக்கும் அடங்காமல், இத் தமிழ்வேந்தர் தனியரசு நடத்திய திறத்தையும் அரசியற் சிறப்பையும் ஆழ்ந்து நோக்குங்கால், தொன்றுதொட்டு இவர்களின் முன்னோர்கள் எத்தனை நூற்றாண்டுகளாக அரசியல் முறையினும், படைத்திறத்தினும், செல்வவளத்தினும் பெருகி வந்திருக்க வேண்டுமென்பது புலனாம். ஒரு சிறுபகுதி தவிர இந்தியநாடு முழுதும் ஒருங்காண்ட ஒருபேர் அரசனுக்கும் உட்படாமற், றனியரசு நடத்தத்தக்க ஆற்றலும் அறிவும் செல்வமும், அச்சிறு பகுதியிலிருந்த அரசர்க்குத் திடுமென வந்துவிடமாட்டா. அவை வருதற்குமுற் பல நூற்றாண்டுகள் கழிந்திருக்க வேண்டு மென்பது திண்ணம்.

பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்னுந் தமிழ் மன்னன் பாண்டவர் படைக்கும் துரியோதனன் படைக்கும் பதினெட்டு நாள் வரையிற் பெருஞ்சோறு வழங்கிய மெய் வரலாற்றினையும் இதனோடு அடுக்கவைத்து ஆராய்வோ மாயின், கி.மு. ஆயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்னரே (வைத்தியா, எம்.ஏ. என்பவரின் கணக்குப்படி கி.மு. மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே) தமிழ்வேந்தருந் தமிழும் தமிழரும் மிக உயர்ந்த நாகரிகவாழ்க்கையி லிருந்தமை தெளியப்படும். இவ்வுண்மைகளை நடுநிலை திறம்பாது நின்று காணவல்ல அறிஞர்க்கு, ‘இறையனராகப்பொருளுரை' முகத்தே சொல்லப் பட்ட தமிழ் வரலாறு தமிழரசர் வரலாறுகள் பெரும் பான்மையும் உண்மையாதல் புலப்படும். அது நிற்க.

இங்ஙனம் பண்டைத் தமிழரசரின் ஆட்சிக்கீழ் அமைதி யுற்றிருந்த பழைய தமிழ்நாட்டின்கட் பழைய கல்வெட்டுகள் காணப்படாமைக்கு ஏது, அதன்கண் அந் நாளில் தமிழ்நூல்கள் மிகுந்திருந்தமையும், அழிவுக்கு இடமான மாறுதல்கள் நிகழாமையுமேயாம். மற்று வடநாட்டிலோ, ஆரியர் ஐரோப்பாவிலிருந்த கொடிய பல்வகை மக்கட் பிரிவினரும் ஒருவர்பின் னொருவராய்ப் புகுந்து சூரையாடியும், உயிர்க் கொலை புரிந்தும், மாதரைக் கற்பழித்தும், நாடுநகர் வளங்களைக் கொளுத்தியும், திருக்கோயில்களைத் தகர்த்தும் பெருந்தீங்கு இழைத்துப் பெரிய மாறுதல்களை உண்டாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/313&oldid=1587867" இலிருந்து மீள்விக்கப்பட்டது