உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

295

புலப்படுதலால், இவன் தொண்டையர் கங்கையர் நாட்டளவில் அமைதிபெறாது, இலங்கைமேலும் படைமேற் கொண்டு சென்றமை அறியப்படும். ஆகவே, இவனுக்கும் திருவிளை யாடல்களிற் சொல்லப்பட்ட வரகுண பாண்டியனுக்கும் ஏதோ ரொற்றுமையுங் காணப்படவில்லை. மேலும், நம்பியார் கூறிய வரகுணன் சிவபிரான் திருவடிக்கண் அன்புடையனாய் மதுரைமா நகரிலேயே அமைந்திருக்க, ஒரு சோழ மன்னன் அவன்மேற் படையெடுத்து மதுரையை நெருங்கினானென்று திருவிளையாடல் கூறுகின்றது.

சோழமன்னர் அங்ஙனம் வலிவுடையராய் விளங்கிய காலம், வடுகக்கருநாடர் அல்லது பல்லவர் வலிமையுடையராய் இத் தமிழ் நாட்டிற் புகுந்து நிலைபெறுதற்கு முன்னரேயாம்; அஃதாவது, கி.பி. நாலாம் நூற்றாண்டிற்கு முற்பட்டாதல் வேண்டும். மற்று, ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியி லிருந்தவனான இவ் வரகுண பாண்டியன் காலத்திலோ சோழமன்னர் எவரும் வலியுடையராயும் இருந்திலர். இவனை எதிர்த்தும் வந்திலர். இவன் காலத்துச் சோழமன்னர் இவனுக்கு நண்பராக இருந்தமையால், இவன் அவரோடு ஒருங்கு சேர்ந்துகொண்டு மேலைக் கங்கா பிருதிவியரசர்களை எதிர்த்தன னென்று 1912ஆம் ஆண்டில் வெளியான 337ஆவது கல்வெட்டு ஒன்றும் புகல்கின்றது. ஆகவே, முதலிற் போர் புரியும் வேட்கையின்றி யிருந்து, பின்னர்ச் சிவபிரான் திருவருட்டுணைகொண்டு சென்று, வலிய வந்தெதிர்த்த பாண்டியன் சோழமன்னர் வலிமையின் மிக்கவராய் நிலவிய மூன்றாம் நூற்றாண்டில் இருந்தவனா மென்பதூஉம். மற்றுக் கல்வெட்டுகளால் நுவலப்படும் இவ் விரண்டாம் வரகுண பாண்டியன் சோழமன்னர் வலிசுருங்கி யிருப்பப் பல்லவ அரசர் வலிமிகுந் தோங்கிய காலத்தின் இறுதிக் கண்ணதான ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்தவனா மென்பதூஉம் பாகுபடுத் துணர்தல் வேண்டும். மேலும், இவன் பாட்டனான வரகுண பாண்டியன் தன் காலத்திலேயே சோழநாட்டைக் கைப்பற்றி அதனைத் தனது அரசின்கீழ் அடக்கி வைத்தன னென்பது முன்னரே காட்டினமாதலின், அவன்றன் பேரனான இவ் வரகுணன் காலத்திற் சோழ மன்னர் இவனுக்கு அடங்கி யிருந்தன ரென்பது சொல்லாமே யமையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/328&oldid=1587887" இலிருந்து மீள்விக்கப்பட்டது