உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் 22

வழிப்பட்டு முன்னை இயல்பு முற்றும் திரிபுற்றுப் பேரின்ப வெள்ளந் தேக்கப் பெற்றமையிற், புன்சிரிப்புடையராய்க் கண்களில் இன்பநீர் வார்ந்திழியத் திருநீற்றை மேனியெங்கும் பூசிக், குறுவியர் பொடித்த மெய்யுடன், அன்பின் பெருக்கால் உரை தழுதழுப்ப உள்ளம் பொங்கித் திருவாசகம் ஓதி உருகியபடியாய் நின்றார். பின்னர் அவ்வருட்குரவன், தன்னொடும்போந்து அங்கு மறையோதிக்கொண்டிருந்த அடியார் குழாத்தினைச் சென்று காண்கவென்று அடிகளைப் பணிப்ப, அங்ஙனமே அவர் அவ்வடியார் கூட்டத்தை யடைந்து, அத்தன் ‘ஆண்டுதன் அடியரிற்கூட்டிய அதிசயங்கண் டாமே” என்பதனை ஈறாகவுடைய அதிசயப்பத்தைப் பாடியுருகினார். சொல் விழுப்பமும் பொருள்விழுப்ப முந்துறும், அன்புநறை யொழுக, அரும்பெருஞ் செந்தமிழ்ப் பாடல்கள் அருளும் அடிகளின் ஒப்புயர்வில்லாத் திறத்தினை உலகம் உணர்ந்து உய்தற்பொருட்டு அவ்வருட்குரவன் அடிகளை “மாணிக்க வாசக!” என்றழைத்து, “நம்மைத் தில்லையம்பலத் தின்கண்ணே வந்துகாண்; இப்போது இங்குநில்!” என்று கட்டளையிட்டுத் தன்னடியார் குழுவினோடும் மறைந்தருளினன். இவ்வாறு தம்மை இந்நிலவுலகத்தே நிறுத்தித் தன்னொடும் போந்த அடியார் குழாத்தொடும் இறைவன் மறைந்து சென்ற வரலாற்றினைக் கீர்த்தித்திருவகவலில்,

“நாயினேனை நலமலி தில்லையுட்

கோலம் ஆர் தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்குஒழித் தருளி

அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும்’

என்று அடிகளே அருளிச்செய்தல் காண்க.

அருட்குரவனாய் எழுந்தருளிய இறைவன் அடிக ளுக்கு மெய்ப்பொருள் அறிவுறுத் தருளியபின், திருப்பதி கங்கள் பாடுமாறு அவருக்குப் பணித்து, அங்ஙனமே சில பாட, அவற்றைக் கேட்டு உவந்து, அவரை விடுத்து மறைந்தருளினான் என்று நம்பியார் திருவிளையாடல் கூறுமாற்றால், இறைவன் அடிகளை ஆட்கொண்டருளிய அஞ்ஞான்றே மறைந்தருளினா னென்பது பெறப்படும் மற்றுக், கடவுண்மாமுனிவர் புராணமோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/89&oldid=1587535" இலிருந்து மீள்விக்கப்பட்டது