உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

41

தன்மையால் அவற்றின் வேறாதலை நன்கறியவைத்தார். இவ்வாறெல்லாம் அடிகள் அருளிச்செய்தது போலவே திருநாகரசு நாயனாரும்,

“இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி

இயமான னாய் எறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி

ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையாய் இன்றாகி நாளை யாகி

நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே" (நின்ற திருத்தாண்டகம். 1)

என எல்லாம் கலப்பினாற் சிவமாய் நிற்றலையுணர்த்தியபின், தன்மையால் அவன் அவையெல்லாவற்றினும் வேறாதலைத் தெரித்து,

“விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத

விதியல்லர் விண்ணு நின்னுந்

திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர்

தெளிநீரு மல்லர் தெரியில்

அரிதரு கண்ணியாளை யொருபாக மாக

அருள்கா ரணத்தின் வருவார்

எரியர வாரமார்பர் இமையாரு மல்லர் இமைப்பாரு மல்லர் இவரே"

(பொது, சிவனெனுமோசை, 2)

என்று தெளித்தருளிச் செய்தமையுங் காண்க.

அற்றேல், உயிர் அணு அணுவாய்க் கெட்டு இறுதியில் இல்லையாய்ப்போம் என்பது புலப்பட அடிகள், “சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாந்திருப்பெருந் துறையுறை சிவனே” என்றருளிச் செய்தனராகலெனின்; இதுவும் அடிகளின் திருவுளக்கருத்தை ஆராய்ந்து பாராமையோடு அச் சொற் றொடர்ப் பொருளின் ஆழத்தையும் உணர்ந்துபாராக் குறையால் நேர்ந்த பிழை பாடாம். இச் சொற்றொடருள்ள செய்யுள் முழுதும் ஈண்டெடுத்துக் காட்டி அதன் பொருளை ஆராய்வாம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/50&oldid=1588305" இலிருந்து மீள்விக்கப்பட்டது