உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • மறைமலையம் - 23

சைவமடங்களிற் பெரிதும் பாதுகாத்து வைக்கப்பட்டமை யாலன்றோ அஃது இஞ்ஞான்று யாம் காணக்கிடைத்தது. இங்ஙனமாகச், சைவசமய உண்மைகளை விரித்துரைக்கும் சிவாகம நூல்கள் சமணகாலத்திற் பெரும்பாலும் அழிந்து பட்டுப் போனமையின், அவற்றின் பயிற்சியும் அருகிப்போக, அக்காலத்திருந்த சைவசமயாசிரியர்களான திருநாவுக்கரையர். திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்திகள் தாம் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்களில் ஆகமங்களைப்பற்றி அடுத் தடுத்துக் கூறிற்றிலர். உண்மை இவ்வாறிருக்க, இதனை யுணராத 'தமிழ்வரலாறுடையார்' தேவாரத்தில் அவை அடுத்தடுத்துக் குறிப்பிடாமை ஒன்றேகொண்டு, அவை தேவாரகாலத்திற்குப் பின்னர்த்தான் மிக்கெழுந்து பரவினவென்று பிழைபட வரைந்தார்; 'திருமந்திரம்' 'ஞானாமிர்தம்' என்னுந் தமிழ் ஆகமநூல்களைக் கற்றறிந்தனராயின் இவ்வாறெல்லாம் வரைந்து இழுக்குறார். அது நிற்க.

அஃதொக்கும், ஆகமங்கள் தமிழ்மொழியில் இயற்றப் பட்டிருந்தனவென்றால் என்னை? ‘காமிகம்' முதலான அவையெல்லாம் வடமொழியிலன்றோ எழுதப்பட்டிருத் தலைக் காண்கின்றேமெனின்; அவ்வியல்பினையும் விளக்கிக் காட்டுதும்: இஞ்ஞான்றுள்ள 'காமிகம்' முதலிய ஆகமங்கள் வடமொழியில் எழுதப்பட்டிருத்தல் கொண்டு அ பண்டைக் காலத்தன வென்றால் பொருந்தாது. இருக்கு, எகர் முதலிய வேதங்கள், பிராமணங்கள், பழைய உபநிடதங்கள் முதலியன எழுதப்பட்டிருக்கும் வடமொழியும், புராணங்கள் ஆகமங்கள் எழுதப்பட்டிருக்கும் வடமொழியும் வேறுவெ றாவனவாகும்; முன்னையது ‘ஆரியமொழி' யென்றும், பின்னையது ‘சமஸ்கிருத மொழி' யென்றுங் கூறப்படும்: இவ் விரண்டின் அமைதிகளும் இலக்கணங்களும் வெவ்வேறாகும்; இவற்றுள் முன்னையதாகிய 'ஆரியமொழி' மிகப்பழைய காலத்தது. பின்னையதாகிய 'சமஸ்கிருத மொழி' அதற்குப் பன்னெடுங்காலம் பிற்பட்டது. பின்னையதாகிய சமஸ்கிருத மொழியிலும் பின்னும் பிற்பட்ட உரைநடைகள் பலவுண்டு; ‘காமிகம்’ முதலிய ஆகமங்கள் எழுதப்பட்டிருக்கும் சமஸ்கிருத மொழி பிற்காலத்துச் சொற்களும் குறியீடுகளும் இலக்கண முடிபுகளுங்கொண்ட உரைநடையால் அமைந்திருத்தலானும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/75&oldid=1588346" இலிருந்து மீள்விக்கப்பட்டது