உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

  • மறைமலையம் - 24

யாவனெனவுங் கடைப்பிடிப்பா ராயினர். இவ் வுண்மை அறிவுறுத்தற் பொருட்டே “சிவன் எனும் நாமந் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்" என்னும் திருநாவுக்கரசு நாயனார் அருண்மொழியும் எழலாயிற்று. அது நிற்க.

இனி, மாலைஞாயிற்றின் மேல்பா லெல்லையெல்லாம் மிகச் சிவந்து சுடருஞ் செக்கர் வானத்தில் மட்டுமே மூன்றாம்பிறை இயற்கையாய்த் தோன்றுதலின், அதனையே உருவக வகையாற் சிவபிரான்றன் செஞ்சடைக்கண் வைகும் மூன்றாம் பிறையாக வைத்துத் தமிழ்ச்சான்றோர் உரைப்பாராயின ரென்பது.

இனித், தீயானது தான் பற்றிய பொருளை முழுதும் எரித்துச் சாம்பராக்குதற்குமுன், அப்பொருளின் மேற்சுற்று முழுமையும் எரித்துச் சாம்பராக்கி அச் சாம்பர் மேலே பூத்திருப்ப உள்ளே தான் செந்தணலாய் முறுகி விளங்கும் இருவகை இயல்பே, இறைவன்றன் திருமேனி மிசைப்பூத்து ஒளிருந் தூய வெண்ணீறாகவும் அதனுட் சிவந்து மிளிரும் அத் திருமேனியாகவும் வைத்து உருவகப்படுத்தப்பட்டது.இவ் அரிய ருவகத்தின் வனப்பு

துடிகொள்நேர் இடையாள் சுரிசூழல் மடந்தை துணைமுலைக் கண்கள்தோய் சுவடு

பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு பொங்கொளி தங்குமார் பினனே

(திருவாசகம், அருட்பத்து, 50)

என்று மாணிக்கவாசகப் பெருமான் இசைத்த செய்யுளிற் கனிந்து நிற்றல் காண்க.

இனி, எண்ணிறந்த உயிர்களை யெல்லாம் இறுகப்பற்றி வருத்திவரும் ஆணவம், மாயை, வினை என்னும் மும்மலங் களையும் குத்திக் கல்லி நீக்கவல்ல பேராற்றல் இறைவன் ஒருவனிடத்தே மட்டும் உளதாகலின், அம் மும்முலங்களையும் அகத்தே முத்திறமாய் நின்று தொலைக்கும் அப்பேராற்றலே, புறத்தே காணப்படுங் கழுக்கடை அல்லது முத்தலைவேல் (சூலம்) ஆக வைத்து உருவகப்படுத்தப்பட்டது. இவ்வுண்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/109&oldid=1590730" இலிருந்து மீள்விக்கப்பட்டது