உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மறைமலையம் - 24

தம்மைப் பலபடியானும் நடுநின்று நன்காய்ந்த ஹெர்மன் ஜாகோபி என்னும் ஐரோப்பிய ஆசிரியர் நன்கு விளக்கிக்காட்டி யிருக்கின்றார்.34 வடநாட்டிற் பண்டைக் காலத்திருந்த சைவ அந்தணத் தாபதர் சிவபிரான் திருவுருவ அடையாளமான காவியாடையே உடுத்துத் தலைமேற் சடைமுடியுடையரா யிருந்தன ரென்பது, அவர் தமது ‘ஜைனசூத்திர ஆங்கில மொழிபெயர்ப்பின்’ முகவுரையில் எடுத்துக் காட்டிய போதாயன தருமசாத்திர மேற்கோள் களால் (2, 6, 11, 15 - 21) நன்கு விளங்கும். சைவ அந்தண முனிவர் உடுத்துங் காவியாடையைப் பார்த்தே, பௌத்த பிட்சுக்கள் நிறத்தால் அதனை யொப்பதொரு துவராடை யுடுப்பராயின ரென்பதூஉம், புத்த சமண்முனிவர் துவக்கத்தில் வடநாட்டின் ஒரு சிறு பகுதியில் இருந்தமைபோலாது சைவமுனிவரர் பரதநாடெங்கும் பண்டுதொட்டே பரவியிருந்தன ரென்பதூஉம் பிறவும் அவரால் நன்கெடுத்துக் காட்டப் ட பட்ட உண்மையாராய்ச்சியிற் றேர்ந்த இவ்வைரோப்பிய ஆசிரியர் எடுத்துக்காட்டிய பண்டை வடநூல் மேற்கோள்களையும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து காட்டிய உண்மை முடிபுகளையும் நடுநின்று நோக்கவல்லார்க்குப்,புத்த சமண்முனிவர் தோன்றுதற்குப் பல நூற்றாண்டுகள் முற்றொட்டே சைவ அந்தண அருந்தவத்தோர் இப் பரத நாடெங்கும் பரவியிருந்தமையும், பின்வந்த புத்த சமண் துறவோர் தமக்குப் பல நூற்றாண்டுகள் முன்னிருந்த சைவ அந்தணரின் தவவொழுக்கத்தையே பெரும்பான்மையுந் தழுவி யொழுகலானமையுந் தெற்றெனப் புலனாகா நிற்கும். ஆகவே, தவவொழுக்கமும், அத் தவவொழுக்கத்தை யுணர்த்தும் 'படிமை, 'படிவம்' 'ப்ரதிமா' என்னுஞ் சொற்களுஞ், சைவ அந்தணரினின்று ஏனைப் புத்தசமண் சமயத்தார்க்கு வந்ததாகல் வேண்டுமேயன்றிப், பிற்காலத் தவரான புத்தர் சமணரிலிருந்து, இவர்க்குப் பல்லாயிரம் ஆண்டு முற்பட்ட சைவ முனிவர்க்குச் சென்றதாகல் ஏலாது. ஆதலால், முற்காலத்தது இது, பிற்காலத்தது இது என்று பகுத்தாராயமாட்டாது, முன்னது பின்னதாகவும் பின்னது முன்னதாகவும் பிறழக்கொண்டு, படிமையொழுக்கஞ் சமணர்க்கே யுரியதெனக் கரைந்தாரது உரை பெரியதொரு தலைதடுமாற்ற வுரையாய் முடிந்தமை கண்டு கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/121&oldid=1590743" இலிருந்து மீள்விக்கப்பட்டது