உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

மறைமலையம் - 24

பேரனாகக் கருதப்படும் நின்றசீர் நெடுமாறனுக்கும் இடையில் அறுபதாண்டு களாவது சென்றதாகல் வேண்டும். நின்றசீர் நெடுமாறன் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே இருந்தமை கல்வெட்டுகளாற் றுணியப்பட்டிருத்தலின், அவற்குப் பாட்டனான அவநி சூளாமணிமாறன் கி.பி.ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியி லிருந்தானாதல் வேண்டுமென்பதுந் தானே பெறப்படும். இம் மன்னர்பிரான் காலத்திற் றமிழ்மொழிப் பயிற்சியும் ஆராய்ச்சியும் மிக்கு ஒங்கவே, அஞ்ஞான்று பெரிது பயிலப்பட்டுவந்த இறையனாரகப்பொரு ளுரையினிடையே,அப் பாண்டி மன்னன்மேற் பாடிய கலித்துறைச் செய்யுட்கள் எல்லா வற்றையும் அவற்றைப் பாடிய புலவரே சேர்த்துவிட்டா ரென்க. இவ்வாற்றால், இப் பாண்டிவேந்தன் ‘இறையனாரகப்பொருளுக்கு' ஆசிரியர் நக்கீரனா ரியற்றிய சாலச்சிறந்த தமிழுரைப் பயிற்சியை மிகப் பரவவைத்தானென்பதூஉம், அது பற்றியே அவன் காலத்துப் புலவரொருவர் அவன்மேற் பாடிய அக் கலித்துறைச் செய்யுட்களை அதன்கட் சேர்க்கலாயினா சேர்க்கலாயினா ரென்பதூஉம் அறியற்பாலன. மாணிக்க வாசகப் பெருமான் அருளிச் செய்த 'திருச்சிற்றம்பலக் கோவையா’ரின் அகப்பொருட் கலித்துறைகள் சைவசமயத் தெய்வமாகிய சிவபெருமான் மேலவாய் வருதலிற் பொது நூலாகிய இறையனார் களவிய லுரையில் அவற்றை யெடுத்துக் காட்டுதல் நடுவன்றாகலானும், அல்லது அவற்றை யெடுத்துக் காட்டலுறின் அக்களவியலுரைப் பயிற்சியை வளர்த்துத் தமிழை யோம்பித் தம் போன்ற தமிழ்ப்புலவரைப் புரக்கும் அவ் வேந்தர் பெருமானைப் பாராட்டுதற்கு விழைந்த தங்கருத்து நிரம்பாமையானும் அப்புலவர் அவ் வரசன் மேற்பாடிய கலித்துறைச் செய்யுட்க ளவ்வளவையும் அவ்வுரையின்கட் சேர்த்துவிடலாயின ரென்று தெளிந்து கொள்க.

இனி, இறையனாரகப் பொருள், 2 ஆஞ் சூத்திர வுரையில் ‘நயப்பு' என்பதற்கு ஆசிரியர் நக்கீரனார் உரைத்த உரையி னிடையே செருகப் பட்டிருக்கும்,

வேறு மெனநின் றிகன்மலைந் தார்விழி ஞத்துவிண்போய் ஏறுந் திறங்கண்ட கோன்றென் பொதியில் இரும்பொழில்வாய்த் தேறுந் தகையவண் டேசொல்லு மெல்லியல் செந்துவர்வாய் நாறுந் தகைமைய வேயணி யாம்பல் நறுமலரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/187&oldid=1590813" இலிருந்து மீள்விக்கப்பட்டது