உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

191

வந்திருந்தவராகச் சொல்லப்பட்ட மாளுவவேந்தரே அந் நூற்றுவர்கன்ன ராதல் வேண்டுமென்றும், அதனாற் செங்குட்டுவன் காலங் கி.பி. ஐந்தாம் நூற்ாண்டேயாகற்பால தென்றுங் கூறினார்.

6

மாளுவவேந்தரும், நூற்றுவர் கன்னரும் வேறல்லர் என்பதனை நாட்ட இவர் காட்டிய இரு சான்றுகளுட், சமுத்திரகுப்தன் படையெடுத்துவந்த ஞான்று மாளுவ நாடு பல பிரிவுகளாக வகுக்கப்பட்டு அரசர் பலரால் ஆளப்பட்ட தென்பதொன்று. ஆனால், இவர் இதற்கு மேற்கோளாக எடுத்துரைத்த ஆங்கில வரலாற்று நூலாசிரியர் இவருரைக்கும் வண்ணமே யுரைப்பக் காணேம். அவ் வாங்கில ஆசிரியர்' 'பஞ்சாபி கீழைஇராசபுதனம் மாளுவ நாடென்பன பெரும்பாலுங் குடியரசு முறையில் உயிர் வாழ்ந்த குடியினர் அல்லது இனத்தவரின் ஆளுகையில் இருந்தன” எனவும், “2சமுத்திரகுப்தன் ஆண்ட நாட்டின் எல்லைப்புறத்திருந்த மாளுவரும் மற்றைக் குடியினருந் தமதாட்சியில் வைத்திருந்த தேயங்கள் தனது பேராளுகையினுள் ளடக்கப்பட்டதுடன் (இரண்டாஞ் சந்திரகுப்தனது) வெற்றி நிறைவெய்திய நடுக்காலம் கி.பி. 395 ஆம் ஆண்டாகக் கொள்ளப்படலாம்" எனவும் மொழிதல் கொண்டு, சமுத்திர குப்தனும் அவன் மகன் இரண்டாஞ் ஞ் சந்திரகுப்தனும் அரசுசெலுத்திய கி.பி.நான்காம் நூற்றாண்டில் மாளுவநாடானது குடியரசின் கீழிருந்ததென்பது பெறப்படுகின்றதே யல்லாமல், அப்போது அது வேந்தராட்சியின் கீழிருந்ததென்பது சிறிதும் பெறப்படக் காணேம். மற்று, ஆசிரியர் இளங்கோவடிகளோ, சேரன் செங்குட்டுவன் எடுப்பித்த கண்ணகி விழாவுக்கு மாளுவநாட்டிலிருந்து வந்த அரசரை “மாளுவவேந்தன்” என்றே விளக்கமாய்க் கூறுகின்றார். ஆகவே, 'செங்குட்டுவன்' நூலோர் தாம் எடுத்துக் காட்டிய ஆங்கில வரலாற்று நூலாசிரியரதுரை தமது கருத்துக்கு முழுதும் மாறாய் நிற்றலை அறிந்து கொள்ளாமை இரங்கற்பால தொன்றாம். ஆங்கிலத்திலுள்ள அந்நூலைத் தமிழொன்றே கற்றார் அறியாராதலால், அந்நூலைக் காட்டியாயினுந் தமது வழுக்கொள்கையினை நாட்டி விடலாமென அவர் எண்ணினர் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/200&oldid=1590827" இலிருந்து மீள்விக்கப்பட்டது