உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

201

நம்பிகள் கொண்ட பொருளே நாயனார் கருத்தென்றல் வாய்வதாகும். சுந்தரமூர்த்தி நாயனாரோ கி.பி. எட்டாம் நூற்றாண்டின் ஈற்றி லிருந்தவர்; நம்பியாண்டார் நம்பிகளோ அவர்க்குப்பின் இருநூறாண்டு கழித்துக் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் ஈற்றில் இருந்தவர். ஆதலால், நம்பிகள் நாயனார் கருத்தை அவர்பால் நேரேயிருந்து கேட்டவர் அல்லரென்பது புலனாம். அங்ஙனமில்லை யாயினும், நாயனார்தம் மாணாக்கர் மரபில்வந்த ஒருவர்பால் நம்பிகள் அதன் பொருளைக் கேட்டாரோ வென்றால், திருத்தொண்டர் திருவந்தாதியின் முதற்கண் உள்ள,

பொன்னி வடகரை சேர்நாரை யூரிற் புழைக்கைமுக மன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல்

பன்னஅத் தொண்டத் தொகைவகை பல்கும் அந்தாதிதனைச் சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதம் துணைதுணையே

என்னுஞ் சிறப்புப்பாயிரச் செய்யுளால் நம்பிகள் அங்ஙனம் அதனை ஒருவர்பாற் கேட்டவரல்லர்; திருநாரையூரிலுள்ள பொல்லாப் பிள்ளையார் அருளால் அதனை யுணர்ந்தவ ராவாரென்பது பெறப்படும். கடவுளிடத்து அன்பு மிக்கவர் செய்த ஒரு நூலைக் கடவுளே அருளிச் செய்ததாகக் கூறுவது பிற்காலத்தவர் வழக்கமாகும். ஆகவே, திருத்தொண்டத் தொகையிற் போந்த 'பொய்யடிமை யில்லாத புலவரை’ நம்பிகள் தொகையடியாராகப் பொருள் செய்து கொண்டது

தமதுள்ளத்திற் பட்டபடியேயாம்; அவர் அவ்வாறு செய்து கொண்ட பொருளே சுந்தரமூர்த்தி நாயனாரது கருத்தென்பது அடாது. என்னை? சுந்தரமூர்த்தி நாயனார் 'பொய்யடிமை யில்லாத புலவர்' என்பதனால் இறைவனைப் பாடிய புலவர் கூட்டத்தினையே கூறல் கருதினாராயின், அவர் திருத்தொண்டத் தொகையின் பத்தாஞ் செய்யுளிற் “பரமனையே பாடுவா ரடியார்க்கும் அடியேன் என்று மீண்டும் அதனையே கூறுவாரல்லர். ஆகவே, 'பொய்யடிமை யில்லாத புலவர் என ஏழாஞ் செய்யுளிலும், ‘பரமனையே பாடுவார்' எனப் பத்தாஞ் செய்யுளிலுங் கூறப்பட்ட அவ்விருவேறு சொற்றொடர் களுக்கும் ஆசிரியன் கொண்ட பொருளைத் துணிதற்கு, அச் சொற்றொடர்கள் நிற்கும் இடங்களின் இயல்புணர்தலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/210&oldid=1590838" இலிருந்து மீள்விக்கப்பட்டது