உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் - 24

பின்னும் ஒரு சான்று காட்டுதும்; நம்பியாண்டவர் நம்பிகள் தாம் அருளிச்செய்த 'திருநாவுக்கரசுதேவர் திருவேகாதச மாலையின் ஏழாஞ் செய்யுளில்,

பதிகம்ஏழ் எழுநூறு பகரும்மா கவியோகி

என்று திருநாவுக்கரசு நாயனார் திருவாய்மலர்ந் தருளியன நாலாயிரத்துத் தொளாயிரம் பதிகங்களே யென்பது தோன்றக்கூறினார். மற்றுத், திருமுறை கண்டபுராணமோ 15 ஆஞ் செய்யுளில்,

ஒருநாற்பத் தொன்பதினாயிரமதாகப் பெருநாமப் புகலூரிற் பதிகங்கூறி

என அரசுகள் நாற்பத்தொன்பதாயிரம் பதிகங்கள் அருளிச் செய்தனரெனக் கூறாநிற்கின்றது; நம்பிகளுக்கு முன்னிருந்த சுந்தரமூர்த்தி நாயனாரும் “இணைகொள் ஏழெழுநூறிருபனுவல் ஈன்றவன் திருநாவினுக்கரையன்” என்று திருநின்றியூர்த் திருப்பதிகத்தில் அருளிச்செய் திருக்கின்றனர். இதனாலுந், 'திருமுறைகண்டபுராணம்' ஆராய்ச்சியுணர்வில்லாத ஒருவராற் செய்யப்பட்டதொரு நூலென்பது இனிது புலனாதலின், சான்றேதுமின்றி அதன்கட் சொல்லப்பட்ட வெறுங்கதையைக் காண்டு நம்பியாண்டார் நம்பிகளைத் தெய்வப் பெற்றியுடை யாரெனக்கோடல் இழுக்காமென்றுணர்ந்து கொள்க. எனவே, தெய்வப் பெற்றியுடையராகாத அவர் ஒரோவழி இழுக்குதல் யல்பேயாகலின் அதுபற்றி அவர் இகழப் படார். அவர் எம்மனோரால் வழுத்தப்படும் மாட்சி நனியுடைய சைவப்பெரியாரென்பதிலும் ஐயம் இல்லையென்க. அத்துணைப் பெரியாரேயாயினும் அவர் வழுவிய இடங்களிலும் அவரைப் பின்பற்றி யாமும் வழுவி எமது மெய்யறிவை யிழத்தல் நன்றாகாது. நம்பிகளினுஞ் சுந்தரமூர்த்தி நாயனாரே பல்லாயிரமடங்கு சிறந்த தெய்வமாட்சி யுடைய ராகலின், அவர் அருளிச்செய்த 'திருத்தொண்டத் தொகை'யிற் போந்த 'பொய்யடிமை யில்லாத புலவர்” என்பதற்கு அவரது கருத்தறிந்து உண்மைப்பொருள் கோடலே சிறந்ததாகுமல்லாமல், நம்பிகளைப் பின்பற்றி நாயனாரது கருத்துக்கு முரணான பொருள் கோடல் பெரிதும் ஏதமாமென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/221&oldid=1590850" இலிருந்து மீள்விக்கப்பட்டது