உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

213

அதுவேயுமன்றிப், 'பொய்யடிமை யில்லாத புலவர்' என்பதற்கு நம்பிகள் கொண்ட பொருளே அதற்குண்மைப் பொருளாயின், அதனை வழிநூலாகக் கொண்டு சார்புநூல் செய்த ஆசிரியர் சேக்கிழார் தாமும் அதற்கு அப்பொருளே கொண்டு பாடியிருத்தல் வேண்டும். பொய்யடிமை யில்லாத புலவர்க்கு நம்பிகள் கொண்ட பொருள் கபிலர், பரணர், நக்கீரர் முதலான நாற்பத்தொன்பான் சங்கப் புலவரேயென்பது,

தரணியிற் பொய்ம்மை யிலாத்தமிழ்ச் சங்க மதிற்கபிலர் பரணர் நக்கீரர் முதனாற்பத் தொன்பது பல்புலவோர் அருணமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே

பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே

என்று அவர் திருத்தொண்டர் திருவந்தாதியிற் பாடிய வாற்றால் துணியப்படும். மற்றுச் சேக்கிழார் அடிகளோ அதற்கு நம்பிகள் கொண்டவாறு பொருள் கொள்ளாது.

செய்யுணிகழ் சொற்றெளிவுஞ் செவ்வியநூல் பலநோக்கும் மெய்யுணர்வின் பயனிதுவே யெனத்துணிந்து விளங்கியொளிர் மையணியுங் கண்டத்தார் மலரடிக்கே யாளானார்

பொய்யடிமை யில்லாத புலவரெனப் புகழ்மிக்கார்

எனப் பொதுப்படக் கூறிச் சென்றார். இ. ச் செய்யுளிற் 'பொய்யடிமை யில்லாத புலவர்' என்பார்: சங்கப்புலவரே என்று கூறப்படாமையோடு, அவர் பலரென்பது குறிக்கப் படாமையும் என்னை?யென்று நுணுகி நோக்கும்வழி, ஆசிரியர் சேக்கிழார்க்கு நம்பியாண்டார் நம்பிகள் கொண்ட பொருள் பொருத்தமாகக் காணப்படவில்லையென்பது தானே போதரும்.

அற்றேற், 'பொய்யடிமை யல்லாத புலவர்” எனப் பட்டார் தனியடியாரே யாவரென்பதும், அவர் மாணிக்கவாசகப் பெருமானே யாவரென்பதுஞ் சேக்கிழார்க்குக் கருத்தாயின் அவை தம்மை அவர் ஏன் வெளிப்படையாகக் கூறிற்றிலரெனிற், சேக்கிழார்க்கு எண்ணூறாண்டு பிற்பட்டதாகிய இஞ்ஞான் றுள்ள எமக்கு அவரது கருத்தைத் துணிபுறக் காட்டும் வலிய சான்று ஏதும் காணப்படாமையின், அதனை இன்னது தானெனத் திண்ணமாய்க் காட்டுதல் இயலாததென விடுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/222&oldid=1590851" இலிருந்து மீள்விக்கப்பட்டது