உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மறைமலையம் - 24

குறிப்பு ஒருசிறிதுங் காணப்படாத தாகவும், இதன்கட் சொல்லப்பட்ட பெண்பாலர் காரைக் காலம்மையாராகவே யிருக்கவேண்டுமெனக் கொண்டாரது கோளுக்குச் சான்றேதுங் காணாமையின், அவருரை கொள்ளற்பாலதன்றென விடுக்க. மேலைச் செய்யுளிற் சொல்லப்பட்ட பெண்பாற்றொண்டர் மாணிக்கவாசகப் பெருமான்றன் அருமைத் திருமனைவி யாராகவே யிருக்க வேண்டுமென்பதனை வரலாற்றிற்

கூறிப்போந்தாம். ஆகவே மாணிக்கவாசகராற் குறித்துச் சொல்லப்பட்ட திருத்தொண்டர் கண்ணப்பருஞ் சண்டீசரும் ஆய இருவரே யல்லாற் பிறரில்லையெனத் துணிந்துகொள்க.

இனித், திருநாவுக்கரசு நாயனாரால் தாம் அருளிச் செய்த திருப்பதிகங்களுட் குறிப்பிடப்பட்ட திருத் தொண்டர் இத்துணையரென்பது ஆராயற்பாற்று. திருக்கழிப் பாலைத் திருத்தாண்டகம், 6 ஆஞ் செய்யுளிலுந், திருச்சாய்க்காட்டுத் திருநேரிசை 8 ஆஞ் செய்யுளிலுந், திருக்குறுக்கை வீரட்டப்பதிகம், 7 ஆஞ் செய்யுளிலுந், திருமழபாடித் திருத் தாண்டகம், 9 ஆஞ் செய்யுளிலும், பொது, “ஆமயந்தீர்த்து” என்னுஞ் செய்யுளிலுங் கண்ணப்ப நாயனார் ஐந்துமுறை குறிக்கப்பட்டிருக்கின்றார். திருச்சாய்க்காட்டுத் திருநேரிசை, 3 ஆம் பாட்டிலுந், திருக்குறுக்கை வீரட்டத்திருப்பதிகம், 4 ஆம் பாட்டிலுந், திருநாரையூர்த் திருப்பதிகம், 8 ஆம் பாட்டிலுந், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டப்பதிகம், 8 ஆம் பாட்டிலுந், கோச்செங்கட்சோழ நாயனார் நான்குமுறை குறிப்பிடப் பட்டுள்ளார்.

திருச்சாய்க்காட்டு நேரிசை, 9 ஆஞ் செய்யுளிலுந், திருக்குறுக்கை வீரட்டப்பதிகம், 3 ஆஞ் செய்யுளிலுந், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டப்பதிகம் 6 ஆஞ் செய்யுளிலுந், திருவாரூர், "ஒருவனா யுலகேத்த நின்றநாளோ" என்னுந் திருத்தாண்டகத்தின் 10 ஆஞ் செய்யுளிலுந் திருச்சேறைப் பதிகத்தின் 5 ஆஞ் செய்யுளிலுஞ் சண்டீச நாயனார் ஐந்துமுறை சொல்லப்பட்டிருக்கின்றார். திருக்குறுக்கை வீரட்டத் திருப்பதிகம் 6 ஆஞ் செய்யுளிலுந், திருவீழி மிழலைத் திருத்தாண்டகம் மூன்றாம் பத்தின், 8 ஆஞ் செய்யுளிலுஞ் சாக்கிய நாயனார் இரண்டுமுறை குறிக்கப் பட்டிருக்கின்றார். திருக்கழிப்பாலைத் திருத்தாண்டகம், 7 ஆஞ் செய்யுளிலுந்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/291&oldid=1590922" இலிருந்து மீள்விக்கப்பட்டது