உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

8

3

21

வடுகுநூல் ஒன்றிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றதென ஓர் அறிஞர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். அதுவருமாறு: "மகாபத்மன் மிக்க செல்வமுடையோன் நந்தனிடத்து 'மகாபத்ம தனம்’ இருந்தமையால் அவன் அப்பெயர் பெற்றான். நூறுகோடி கொண்டது ஒரு பத்மம். ஆயிரம் பத்மங் காண்டது ஒரு மகாபத்மம். இவன் தனது ஆண்மையால் நிலை நிறுத்திய மகதநாட்டிலிருந்து வரி கடமை காணிக்கைகளை அருளும் இரக்கமுமின்றிக் கவர்ந்து, அங்ஙனங் கவர்ந்த அப்பொருட்டிரளை யெல்லாங் குவியல் குவியலாகச் சேர்த்து வந்தமைபற்றி மிக்க செல்வனெனப் பெயர் பெற்றான். இவன் கங்கையாற்றின் நீரை ஒருபுறம் அணைகோலித் தடுத்து, அதனடியில் ஐந்து அறைகள் வெட்டுவித்து வட்டுவித்து அவற்றை அழுத்தமான கற்சுவர்களால் அழியாதமைப்பித்து, அவற்றின் கண் அப் பொருட்டிரளை நிரப்பிப், பின்னர் உருக்கியோட்டிய ஈயத்தால் அவ்வறைகளை மூடுவித்து, அதன்பின் அணையை உடைப்பித்துக் கங்கை நீரை அவற்றின்மேல் ஓடச் செய்தனன்” தமிழ்நாட்டிலே யன்றி வடுகுநாட்டிலுந் தொன்றுதொட்டு வழங்கிவந்த இவ் வரலாற்றின் இயல்பினை உற்றுநோக்குங்கால், இஃது இவ் விந்தியநாடு முழுதும் அஞ்ஞான்று பரம்பி வழங்கிய தொன்றாதல் நன்கு விளங்காநிற்கும். இதனானன்றே ஆசிரியர் மாமூலனார் 'அகநானூற்'றில் தாம்பாடிய மற்றையொரு செய்யுளிலும் (251) “நந்தன் வெறுக்கை யெய்தினும்” என்று நந்தனது பெருஞ்செல்வத்தை வியந்துரைத்தார். 'வெறுக்கை’ எனினுஞ் செல்வமெனினும் ஒக்கும். இவ்வாற்றாற் ‘சேரன் சங்குட்டுவன்’ நூலார், "நந்தர், பாடலிக் குழீஇக், கங்கை நீர்முதற் கரந்த நிதியம்' என்னும் ஆசிரியர் மாமூலனாரது பாட்டுக்கு உண்மைப் பொருள் காண அறியாது, கங்கைநீர் பாடலியை அழித்ததென அதற்குப் பொருந்தாப் பொருளுரைத்து இழுக்கி யிடர்ப்பட்டமை தெற்றெனப் புலனாம். மாமூலனார் காலத்திற் பாடலிநகர் சிறப்புற்றிருந் தமை பற்றியே அதன்கண் நிகழ்ந்த செய்திகளைத் தெரிந்துரைத்தாராகலின், அதற்கு முரணாக அஃதழிந்து பட்ட காலத்தில் அவரிருந்தாரெனச் சங்குட்டுவன் நூலார் உரைத்த உரையும், அதுகொண்டு காட்டிய கோட்பாடும் பெரியதொரு தலைதடுமாற்றமாய் முடிந்தமை கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/30&oldid=1590500" இலிருந்து மீள்விக்கப்பட்டது