உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3×

303

தேற்றமாமென வுரைப்பர். அற்றேல், அம் மூவர்க்கும் பின்னிருந்த மாணிக்கவாசகர் தாமருளிச்செய்த திருவாசகந் திருக்கோவையாருள் அம் மூவரையுங் குறிப்பிட்டு ஏதுமுறை யாமை யென்னையென எதிர்கடாவு வார்க்கு அவர் விடுக்குமா றறிதுயாது விழிக்கு நீரராவராகலின், அங்ஙனம் அழிவழக்குப் பேசுதல் பெரியதோர் ஏதமா மென்றுணர்ந்து கொள்க. அல்லதூஉம், திருவாசகந் திருக்கோவையாரின்கட் காணப்படுந் தமிழ்ப் புலனெறி வழக்கிற்கும், தேவாரத் திருமுறையின் றமிழ்ப் புலனெறி வழக்கிற்கும் வேறுபாடு பெரிதாகலானும், அவற்றுள்ளும் முன்னையவற்றில் தமிழ்த்தொன்மை வழக்கே பெரும் பான்மையும் பயின்று வருதலானும், அவ்விருவகை வழக்கிற்கும் இடையிட்ட காலம் சிறியதாதல் செல்லாது. தமிழ்த்தொன்மை வழக்கே தழீஇ வந்த திருவாசகந் திருக்கோவையாரென்பன, தமிழ்ப் புதுவழக்கு இடை யிடையே விராய்வந்த தேவாரத் திருமுறைக்குப் பின்னெழுந்தன வென்றல் பெரியதொரு தலைதடுமாற்றமாய் அங்ஙனங் கூறிடுவார் தமிழ்வழக்கு ஒருசிறிதும் அறியாரென்பதனைப் பெறுவிக்கும். ஆகலின், அவ்வாறு கூறுதல் எவ்வாற்றானும் பொருத்த மில்லாத போலியுரையா மென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/312&oldid=1590951" இலிருந்து மீள்விக்கப்பட்டது