உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

67

கதிரவனும் வெம்மை கலந்த ஆற்றலை வழங்கும் வண்மை (ஈகை) யுடையனாகலின் அவனையும் 'வள்ளி' எனக்கூறல் வேண்டுமாம் பிறவெனின்; அற்றன்று; கொடுமையோடு கொடுக்குங் கொடையினைக் கொடை என்றுஎவரும் உயர்த்துக்கூறார், அஃது இன்றியமையாக் கொடையேயா யினும் மற்று, அகங்கனிந்து முகம் மலர்ந்து குளிர்ப்பக்கூறிக் கொடுக்குங் கொடை யிடையே எவரும் மகிழ்ந்து புகழாநிற்பர். அங்ஙனமே, ஞாயிறு கொடுக்கும் மின்னாற்றல் இன்றியமை யாததொன்றே யாயினும், அது வெம்மையொடு கூடியிருத் தலின் அதனை 'வண்மை' என ஆசிரியன் கொண்டிலன்; மற்றுத் திங்கள் வழங்குந் தண்மைகலந்த மின்னொளி எவரானும் விரும்பி ஏற்கப்படுங் குளிர்ச்சியுடைமையின் அதனையே ஆசிரியன் ‘வண்மை' என வேண்டினான். அதுவேயுமன்றிக், கதிரொளி வெய்யதாகலின், அஃது ஆண்டன்மைப் பாற்படும்; நிலவொளி தண்ணிதாகலின் அது பெண்டன்மைப் பாற்படும்.6 அப்பெண்பாற் றன்மையினை 'வள்ளி' என்னுஞ்சொல் கரவிகுதியால் நன்குணர்த்துதலின். அது திங்கண் மண்டிலத்தின் வண்மைத் தன்மையினை அறிவிக்கும் பெயராதற்குப் பெரிதும் ஏற்புடைத்தாதல் காண்க. ஈண்டுக் காட்டிய இவ்வியல்புகள் “ஞாயிறு நெருப்பின் றன்மையும் ஆண்டன்மையும் உடைமையானும், திங்கள் நீரின்றன்மையும் பெண் டன்மையும் உடைமையானு மென்பது. அல்லதூஉம், வெண்கதிர் அமிர்தந் தேவர்க்கு வழங்கலானும் 'வள்ளி' என்பதுமாம்” என்று நச்சினார்க்கினியர் கூறியவுரையானும் புலனாதல் கண்டுகொள்க." இறைவன் ஒருபால் ஆண்டன் மையனாயிருந்து அழித்தற் றொழிலினையும், மற்றொருபாற் பெண்டன்மையனாயிருந்து படைத்தல் காத்தல்களையுஞ் செய்கின்றனனாகலின், அவன்றன் ஆண் கூற்றின்பாற் பட்ட 'கொடிநிலை' போல, ஈண்டு 'வள்ளி' என்பது அவன்றன் பெண்கூற்றின்பாற்பட்டு நிற்றலும் நுணுகி யுணர்ந்து கொள்க.

இவ்வாறாகக், காணவுங் கருதவும்படாத முதல்வன் இயல்பினை நம்மனோர் காணவுங் கருதவும் எளிதாம்படி வைத்து விளங்கக் காட்டும் விழுப்பம்பற்றியே “கொடி நிலை கந்தழி வள்ளி” என்னும் மூன்றும் அம் முதல்வனோடொப்ப வைத்து வாழ்த்தப்படுமென்று முற்றுணர்வுடைய ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/76&oldid=1590697" இலிருந்து மீள்விக்கப்பட்டது